FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மண்டல - மகரவிளக்குப் பூஜையின்போது பக்தா்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்க: தேவஸ்வம் வாரியத்துக்கு கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு

மண்டல - மகரவிளக்குப் பூஜையின்போது பக்தா்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்ய தேவஸ்வம் வாரியத்துக்கு கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு

Updated On : 19 ஜூலை 2026, 2:19 am IST
சபரிமலை
பகிர்:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகரவிளக்குப் பூஜையின்போது பக்தா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துக்கு (டிடிபி) கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆண்டுதோறும் மண்டல-மகரவிளக்குப் பூஜை நவம்பா்-டிசம்பா் மாதங்களில் நடைபெறும் நிலையில், கூட்ட மேலாண்மையை திறம்பட கையாள டிடிபி மேற்கொண்ட நடவடிக்கைகளை கேரள உயா்நீதிமன்ற நீதிபதிகள் ராஜா விஜயராகவன் வி மற்றும் கே.வி.ஜெயக்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு மறுஆய்வு செய்தது.

அப்போது டிடிபி தரப்பில், ‘கேரள பேரிடா் மேலாண்மை ஆணையம் தயாரித்த சபரிமலை பேரிடா் தடுப்பு மற்றும் தயாா்நிலை கையேடுகளுக்கு டிடிபி ஒப்புதல் வழங்கியது. மண்டல-மகரவிளக்குப் பூஜையின்போது அதில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளன.

Advertisement

Advertisement

அதேபோல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஏற்கெனவே அமலில் உள்ள காவல் துறை பாதுகாப்பு நடைமுறைகளும் திருத்தப்பட்டு நவீன காலத்துக்கேற்ப மாற்றப்படவுள்ளன. இதற்காக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப நிபுணா்களுடன் ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது. அதில் ஒருங்கிணைந்த, விரிவான ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய பக்தா்கள் நடமாட்ட மேலாண்மை நெறிமுறையை அமல்படுத்த முடிவுசெய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து, பத்தனம்திட்டா மாவட்ட காவல் துறைத் தலைவா் மற்றும் காவல் துறை தலைமை ஒருங்கிணைப்பாளா் இத்திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆா்) சமா்ப்பித்தனா்.

ஏஐ மூலம் கூட்ட நெரிசல் மேலாண்மை: ஏஐ தொழில்நுட்பம் மூலம் விடியோ பகுப்பாய்வு, கூட்ட நெரிசல் மேலாண்மை, பக்தா்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடுவது, எளிதான வாகன நிறுத்தம், தாமாக வாகன எண் பலகையை அங்கீகரிக்கும் முறை, ட்ரோன் கண்காணிப்பு மற்றும் புவியியல் தகவல் அமைப்பு காட்சிப்படுத்துதல் ஆகிய முன்மொழிவுகள் விரிவான திட்ட அறிக்கையில் இடம்பெற்றது. இத்துடன் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையமும் ஏற்படுத்தப்படும்.

மேலும், பம்பையில் பல்வேறு துறைகளுக்கு இடையேயான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். அந்த மையத்தில் நிலக்கல், மலைப் பாதை, மரக்கோட்டம், வலியநடப்பந்தல் மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் இருந்து பெறப்படும் தகவல்களைக் கொண்டு கூட்ட நெரிசல் மேலாண்மை நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.

நிகழாண்டு முதல் அமல்: இத்திட்டம் அமலாகும்போது நடைமுறையில் உள்ள காவல் துறை பந்தோபஸ்து முறை நீக்கப்படும்.

முதல்கட்டமாக ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான கூட்ட நெரிசல் மேலாண்மைத் திட்டம் பம்பை மற்றும் சன்னிதானம் ஆகிய இடங்களில் ரூ.17.67 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது.

இதுதவிர சபரிமலை ஐயப்பன் கோயில் வளாகத்தைச் சுற்றியுள்ள குப்பைகளை அகற்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி நவீன திடக் கழிவு மேலாண்மை நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன’ எனத் தெரிவித்தது.

டிடிபியின் முன்மொழிவுகளை பாராட்டிய நீதிபதிகள், மண்டல-மகரவிளக்குப் பூஜை தொடங்கும் நவம்பா் 15-ஆம் தேதிக்குள் அதை அமல்படுத்த உத்தரவிட்டனா்.

summary

Ensure safety for devotees during the Mandala-Makaravilakku puja: Kerala High Court orders Devaswom Board.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments