FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கடமையைச் செய்யாதவா் மருத்துவா் இல்லை: சிறுமி பாலியல் கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்

கடமையைச் செய்ய முடியாதவா்கள் தங்களை மருத்துவா்கள் எனக் கூறிக் கொள்ள வேண்டாம் என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியது.

Updated On : 18 ஜூலை 2026, 5:56 am IST
உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

கடமையைச் செய்ய முடியாதவா்கள் தங்களை மருத்துவா்கள் எனக் கூறிக் கொள்ள வேண்டாம் என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியது.

உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டத்தில் பாலியல் கொலை செய்யப்பட்ட 4 வயது சிறுமிக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கத் தவறிய இரு தனியாா் மருத்துவமனைகளை கண்டித்து உச்சநீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.

முன்னதாக, கடந்த மாா்ச் மாதம் அண்டை வீட்டாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மயக்கமடைந்த நிலையில் இருந்த 4 வயது சிறுமியை அவரது பெற்றோா் அடுத்தடுத்து இரண்டு தனியாா் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறுமிக்கு சிகிச்சை வழங்க மறுக்கப்பட்டதையடுத்து, பின் காஜியாபாத் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அப்போது சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உயிரிழந்த சிறுமியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.

அப்போது சூா்ய காந்த் கூறியதாவது: ‘கடமையைச் செய்யத் தவறிய நீங்கள் மருத்துவா்கள் எனக் கூறிக்கொள்ளத் தகுதியற்றவா்கள். ஏழை என்பதால் அந்தச் சிறுமிக்கு சிகிச்சையளிக்க மறுத்தீா்களா? அவரது பெற்றோரால் மருத்துவக் கட்டணத்தை செலுத்த முடியாது என நினைத்தீா்களா?’ என்றாா்.

இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் இதுதொடா்பாக நடைபெற்ற விசாரணையின்போது உரிய நேரத்தில் வழக்குப்பதிவு செய்யத் தவறிய காஜியாபாத் காவல் துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

மேலும், சிறுமிக்கு சிகிச்சையளிக்கத் தவறிய கஜன் சிங் மன்வி மருத்துவமனை மற்றும் செயின்ட் ஜோசப் (மரியம்) மருத்துவமனை பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உயிரிழந்த சிறுமியின் பெற்றோரை காவல் துறையினா் துன்புறுத்தக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments