பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்
பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய ராகுல் காந்தி வலியுறுத்தி இருப்பது பற்றி...
இளைஞர்கள், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தி, நாடாளுமன்றம் நோக்கி அமைதிப் பேரணி நடத்த முயற்சித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் ஆதரவாளர்களான இளைஞர்கள், மாணவர்கள் மீது தில்லி காவல்துறை தடியடி நடத்தியது. மேலும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தில் நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்களுக்கு எதிரான தாக்குதல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:
“கல்வி முறை மற்றும் தேர்வு முறைக்காக மாணவர்கள் போராடி வருகின்றனர். கல்வி முறை சீர்குலைந்துவிட்டன என்பது நாட்டுக்கே தெரியும். அவை நடைமுறையில் செயலிழந்துவிட்டன. இதைத்தான் இளைஞர்கள் கூறுகிறார்கள். நாங்களும் இதைத்தான் கூறி வருகிறோம். இதுதொடர்பாக நான் பல கேள்விகளை எழுப்பி வருகிறேன். ஆனால் பிரதமர் மெளனம் காப்பது ஏன்?
நாட்டின் இளைஞர்களை இப்படி நடத்தக்கூடாது. அவர்களுக்கு எந்த வாய்ப்பும் வழங்காமல், அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வு என்ற ஒரே ஒரு வழி மட்டுமே இருந்தது, அதுவும் இப்போது சிதைக்கப்பட்டுவிட்டது. நமது மாணவர்கள் கல்வி முறையைப் பற்றி மட்டுமல்ல, தங்கள் எதிர்காலத்தைப் பற்றியும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இது இளைஞர்களின் எதிர்காலம் சார்ந்த விஷயம். அம்பானி வீட்டுத் திருமணத்துக்காக ரூ. 1,000 கோடி செலவிடப்படுவதை அவர்கள் பார்க்கிறார்கள். அதே வேளையில், சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்கக்கூட அவர்களிடம் பணம் இல்லை.
மாணவர்கள் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் தர்மேந்திர பிரதானும் தங்களின் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, காவல்துறையின் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மாணவர்களை ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
Prime Minister Modi and Amit Shah must resign - Rahul Gandhi insists
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.