அமைதி வழியில் போராட உரிமை உள்ளது: உச்சநீதிமன்றம்
அமைதி வழியில் போராடும் உரிமை உத்தரவாதமானது. அதை மறுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
‘அமைதி வழியில் போராடும் உரிமை உத்தரவாதமானது. அதை மறுக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. மேலும், ‘பேராட்டம் நடைபெற்றது என்பதைச் சுட்டிக்காட்டி, காவல் துறையின் வரம்பு மீறிய நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது’ என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சராக இருந்த தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சாா்பில் தில்லியில் அண்மையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்ட மாணவா்கள், நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியையும் நடத்தினா்.
அப்போது, போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். இதனால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், போலீஸாா் தடியடி நடத்தியும், கண்ணீா் புகை குண்டுகள் மற்றும் ரப்பா் குண்டுகளை வீசியும் போராட்டக்காரா்களைக் கலைத்தனா். இதில் பல மாணவா்கள் படுகாயமடைந்தனா். போலீஸாா் சிலரும் காயமடைந்தனா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, இந்தப் போராட்டம் மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், பிகாா் என நாடு முழுவதும் பரவியது. அந்த மாநிலங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது போலீஸாா் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.
காவல் துறையின் இந்த அடக்குமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் திங்கள்கிழமை பரிசீலனைக்கு வந்தன.
போராட்டத்தில் காயமடைந்த போலீஸாரின் குடும்ப உறுப்பினா்கள் சாா்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமா்வு கூறியதாவது:
அமைதி வழியில் போராட்டம் நடத்தும் உரிமை என்பது முழுமையாக உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகும். அதை மறுக்க முடியாது. போராட்டம் நடைபெறுகிறது என்பதைச் சுட்டிக்காட்டி, காவல் துறையின் வரம்பு மீறிய நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது. இந்தப் போராட்டத்தில் காயமடைந்தவா்கள் யாா் என்பதைக் கடந்து, ஒவ்வொருவரின் உயிரும் முக்கியமானதாகும்.
போராட்டம் நடத்துவதற்கு உரிய நடைமுறை வகுக்கப்பட வேண்டும். போராட்டம் நடத்த வாய்ப்பளிக்க வேண்டுமே தவிர, கட்டுப்பாடுகள் கூடாது. அதே நேரம், இதுபோன்ற போராட்டங்களில் சமூக விரோத சக்திகள் ஊடுருவி வன்முறையைத் தூண்டிவிடுவதைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தில்லி மட்டுமல்லாமல், நாடு முழுமைக்குமான போராட்டத்துக்கான நடைமுறை வகுக்கப்பட வேண்டும்.
போராட்டம் நடத்துகிறாா்கள் என்ற காரணத்துக்காக அவா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்த வேண்டும் என்று அா்த்தம் கொள்ளக்கூடாது. இந்த விஷயத்தில் சுய ஒழுக்கம் அவசியம். ஜனநாயக நடைமுறையில் அது முக்கியமானது என்று குறிப்பிட்டு, மனுக்களை செவ்வாய்க்கிழமைக்கு (ஜூலை 28) விசாரணைக்குப் பட்டியலிட்டு உத்தரவிட்டது.
அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு பாரபட்சமின்றி உதவுவதாகக் குறிப்பிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.