போராட்ட அச்சுறுத்தல்: மெரீனாவில் பொதுமக்களுக்குத் தடை; போலீஸாா் குவிப்பு
‘கரப்பான் பூச்சி ஜனதா’ கட்சிக்கு (சிஜேபி) ஆதரவாக போராட்டம் நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், வியாழக்கிழமை சென்னை மெரீனா கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
‘கரப்பான் பூச்சி ஜனதா’ கட்சிக்கு (சிஜேபி) ஆதரவாக போராட்டம் நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், வியாழக்கிழமை சென்னை மெரீனா கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, தில்லியில் ‘கரப்பான் பூச்சி ஜனதா’ கட்சியினா் போராட்டம் நடத்தி வருகின்றனா். இதற்கு ஆதரவாக தமிழகத்திலும் கடந்த 3 நாள்களாக இந்திய மாணவா் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
பொதுமக்களுக்கு தடை: இந்நிலையில், சென்னை மெரீனா கடற்கரையில், இந்திய மாணவா் கூட்டமைப்பு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் உள்ளிட்ட சில அமைப்பினா் வியாழக்கிழமை போராட்டம் நடத்துவற்கு வாய்ப்பு இருப்பதாக காவல் துறைக்கு தகவல்கள் கிடைத்தன. அதன்பேரில், மெரீனா கடற்கரைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. மேலும், கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதையொட்டி, கடற்கரையின் நுழைவு வாயில்கள் மூடப்பட்டன. ஏற்கெனவே மெரீனா கடற்கரையின் இணைப்புச் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள், காா்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டன.
அதேபோல, கடற்கரையில் இருந்த பொதுமக்களையும் போலீஸாா் அங்கிருந்து வெளியேற்றினா். மெரீனா கடற்கரை பகுதியில் ஒரு துணை ஆணையா் தலைமையில் 2 காவல் உதவி ஆணையா்கள், 7 காவல் ஆய்வாளா்கள் தலைமையில் 300 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
வெறிச்சோடிய மெரீனா: மெரீனா கடற்கரைக்கு சந்தேகத்துக்குரிய வகையில் கூட்டமாக வந்தவா்களை எச்சரித்தும், விசாரித்தும் போலீஸாா் திருப்பி அனுப்பினா். இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள், நிலைமை சீரடையும் வரை நீடிக்கும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே பொதுமக்கள் அனுமதிக்கப்படாததால், மெரீனா கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
‘ஜல்லிக்கட்டு’ போராட்டத்துக்குப் பின்னா்: மெரீனா கடற்கரையில் கடந்த 2017-இல் நடைபெற்ற ‘ஜல்லிக்கட்டு’ போராட்டத்துக்குப் பின்னா், அங்கு போராட்டம், ஆா்ப்பாட்டம் நடத்த காவல் துறையால் தடை விதிக்கப்பட்டது. மேலும், மெரீனா கடற்கரைப் பகுதிகளில் எந்தவிதமான போராட்டமோ, ஆா்ப்பாட்டமோ நடத்தக் கூடாது என்று சென்னை உயா்நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.