கரப்பான் பூச்சிகளால் ஸ்தம்பிக்கும் தலைநகர் தில்லி! ஏன், என்ன நடக்கிறது?
தில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் பற்றி...
தில்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தி, கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் ஆதரவாளர்களான இளைஞர்கள், மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் மாதம் முதல் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டம் நடத்தி வருகின்றது.
இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கடந்த ஜூன் 28 முதல் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான ஜூலை 20 ஆம் தேதி, ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என்று சிஜேபி அறிவித்திருந்தது.
Advertisement
Advertisement
இதனிடையே, கடந்த ஜூலை 18 ஆம் தேதி, உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை தில்லி காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தது.
தில்லி காவல்துறையின் இந்த அணுகுமுறை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, தங்களின் போராட்டத்தை நிறுத்தப் போவது இல்லை என்றும், தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்றும் சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்தார்.
மேலும், ஜந்தர் மந்தரில் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தையும் அபிஜித் தீப்கே தொடங்கினார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கியதை அடுத்து, சிஜேபியின் போராட்டம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு தலைவலியாக மாறியது.
நாடாளுமன்ற கூட்டத்துக்கு வருகை தந்த எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நேரடியாக ஜந்தர் மந்தருக்குச் சென்று சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்கத் தொடங்கினர்.
இதனிடையே, மாணவர்களின் பேரணியை முடக்கும் வகையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக பிஎன்எஸ் 163 தடைச் சட்டத்தை ஜூலை 19 ஆம் தேதி இரவே தில்லி காவல்துறை அமல்படுத்தியது.
நாடாளுமன்ற சுற்றுப் பகுதிகளில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களை காவல்துறை மூடியது. ஜந்தர் மந்தரை இணைக்கும் சாலைகளை முடக்கி, உள்ளேவும் வெளியேவும் யாரும் செல்லாத வகையில் தடுப்புகளை காவல்துறை அமைத்தது.
இதற்கு மத்தியில், ஜந்தர் மந்தரில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நாடாளுமன்றம் நோக்கி, ஜூலை 20 அன்று காலை பேரணியாகச் செல்ல முயற்சித்தனர்.
ஆனால், அமைதியாக பேரணி செல்ல முயற்சித்த மாணவர்கள், இளைஞர்கள் மீது தில்லி காவல்துறையும், அதிரடிப் படைகளும் தடியடி நடத்தி கலைத்தது. கட்டுக்கடங்காத கூட்டம் நாலா பக்கமும் தெரித்து ஓடிய காட்சிகள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்னொரு புறம் மாணவர்களும், இளைஞர்களும் நாடாளுமன்றத்துக்குள் புகுந்துவிடக் கூடாது என்பதற்காக நாடாளுமன்ற கதவுகள் அடைக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையும், தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனங்கள் என கிட்டத்தட்ட போர்ச்சூழலுக்கு தயாராகும் வகையில் தில்லி காவல்துறையும், பாதுகாப்புப் படைகளும் தயாராகி நின்றன.
கடந்த ஒரு மாதக் காலமாக நடைபெற்று வரும் போராட்டத்தை முடிக்க மத்திய அரசு தரப்பில் இருந்து யாரும் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை என்றும், போராட்டத்தை முடக்கவே தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர் என்றும் சிஜேபி தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
நாங்கள் எவ்வித தாக்குதலையும் நடத்தவில்லை, வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று தில்லி காவல்துறையினர் தெரிவித்த நிலையில், சமூக ஊடகங்கள் முழுவதும் காவல்துறை நடத்திய தாக்குதல்கள் காணொலிகளும், புகைப்படங்களையும் சிஜேபி இளைஞர்கள் வைரலாகத் தொடங்கினர்.
இதனிடையே, போராட்டக்காரர்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்ததாகவும் தில்லி போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
மேலும், சிஜேபி போராட்டம் காரணமாக நாடாளுமன்ற வளாகத்துக்குள்ளேயே இணைய வசதி தடை செய்யப்பட்டு, வாட்ஸ்ஆப் முடக்கப்பட்டதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். தொடர்ந்து, பேரணியில் காவல்துறை தாக்குதலால் காயமடைந்த மாணவர்களை நேரில் சந்தித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆறுதலும் தெரிவித்தனர்.
இதற்கு மத்தியில், முறையான சீருடை அணியாமல் பாதுகாப்புக்கு வந்ததாக கூறப்படும் சிலர், போராட்டக்காரர்களை கண்மூடித் தனமாக தாக்கியுள்ளனர். அவர்கள் காவலர்களா? இல்லையான்னே தெரியவில்லை. இப்படியாக சர்சைகளுக்கு மேல் சர்சையில் தில்லி காவல்துறை சிக்கியுள்ளது.
ஆனால், தில்லி காவல்துறையின் அடக்குமுறைக்கு மத்தியில் நேற்றிரவே மீண்டும் ஜந்தர் மந்தருக்கு திரும்பிய இளைஞர்களும் மாணவர்களும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இதற்கு மத்தியில் சிஜேபி நிர்வாகிகளை அழைத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா பேச்சுவார்த்தை நடத்தியிருந்தாலும், முறையான எந்த முடிவையும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஜேபி போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இதற்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, நாடாளுமன்றத்துக்கு அருகே பேரணியாகச் சென்று மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ராகுல் காந்தி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டார்.
இவ்வாறாக தில்லி போராட்டம் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், அடுத்து என்ன நடக்கப் போகிறது? மத்திய அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
ஆனால், சிஜேபி போராட்டத்தை இனியும் மத்திய அரசால் வெறுமனே தட்டிக்கழிக்க முடியாது என்பது மட்டும் நிஜம்.
Capital city brought to a standstill by cockroach janata party - What is happening in Delhi?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.