FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புச் செய்திகள்

கரப்பான் பூச்சி நிழல் சக்தி!

ஒரு சாதாரண நையாண்டி மீம் பக்கமாக இணையத்தில் தொடங்கி, இன்றைக்கு நாட்டின் தலைநகரையே உலுக்கும் அளவுக்கு ஒரு பிரம்மாண்ட களப் போராட்டமாக உருவெடுத்துள்ளது "கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

Updated On : 25 ஜூலை 2026, 7:11 am IST
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி - கோப்புப் படம்
பகிர்:

ஒரு சாதாரண நையாண்டி "மீம்' பக்கமாக இணையத்தில் தொடங்கி, இன்றைக்கு நாட்டின் தலைநகரையே உலுக்கும் அளவுக்கு ஒரு பிரம்மாண்ட களப் போராட்டமாக உருவெடுத்துள்ளது "கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (சிஜேபி). இந்திய தேர்தல் ஆணையத்தின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி இது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல; ஆனால், ஒரு சக்திவாய்ந்த "நிழல் இயக்கம்' ஆக இது மாறியுள்ளது.

2026, மே 15}ஆம் தேதி இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் வழக்கு விசாரணையின்போது, விசாரணை நீதிமன்றங்களில் நூற்றுக்கணக்கில் காணப்படும் மனுக்கள், வாய்தாக்களுக்காக வந்ததால் வழக்குரைஞர்கள் "வேலையும், வாய்ப்புகளும் கிடைக்காத சில இளைஞர்கள் கரப்பான்பூச்சிகளைப் போலவும் ஒட்டுண்ணிகளைப் போலவும் மாறுகிறார்கள்' என்று தெரிவித்த வாய்மொழி கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிறகு, போலிச் சான்றிதழ் வைத்திருப்பவர்களையே தான் குறிப்பிட்டதாக தலைமை நீதிபதி விளக்கம் அளித்தார். இருந்தபோதிலும், இந்த வார்த்தை இளைஞர்களை மாறுபட்ட கோணத்தில் சிந்திக்க வைத்தது.

இவர்களின் கொந்தளிப்பை எண்ம (டிஜிட்டல்) ஆயுதமாக மாற்றத் தீர்மானித்தார் அமெரிக்காவில் இருந்த 30 வயதான எண்ம வியூகவாதி அபிஜீத் தீப்கே. மே 16}ஆம் தேதி மத்தியில் ஆளும் பாஜகவின் பெயரை "நையாண்டி' செய்யும் விதமாக "கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (சிஜேபி) என்ற பெயரில் ஒரு சமூக வலைதள பக்கத்தை தீப்கே தொடங்கினார். இதன் இன்ஸ்டாகிராம் பக்கம், சில வாரங்களிலேயே 2 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைப் பெற்று, நாட்டின் முதன்மை அரசியல் கட்சிகளைவிட அதிவேக எண்ணிக்கை வளர்ச்சியைப் பதிவு செய்தது.

Advertisement

Advertisement

இணையத்தில் இருந்து வீதிக்கு...: வெறும் "மீம்'களுடன் நின்றுவிடாமல் அடுத்த சில நாள்களிலேயே நீட் 2026 வினாத்தாள் கசிவு, முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை சிஜேபி முன்வைத்தது. இதை வலியுறுத்தும் விதமாக, ஜூன் மாதத்தில் தில்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டத்தில் குதித்தனர். அடுத்த சில தினங்களில் லடாக் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் இவர்களுக்கு ஆதரவாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தலைநகரில் தொடங்கினார்.

ஜூலை 20 (நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள்) சிஜேபி அறிவித்த "சன்சத் சலோ' (நாடாளுமன்றம் நோக்கி) பேரணி, மற்ற போராட்டங்களைப் போலவே நீர்த்துப் போகும் அல்லது பலவீனமடையும் என்று தில்லி காவல் துறை கருதியது. ஆனால், அது தப்புக் கணக்கு என்பதை பேரணி நாளன்று பதிவான நிகழ்வுகள் உணர்த்தின.

ஜந்தர் மந்தர் சாலை சந்திப்புகளில் காவல் துறையினர் போட்டிருந்த எண்ணற்ற தடுப்புகளை உடைத்துக்கொண்டு, புதிய நாடாளுமன்றக் கட்டடம் உள்ள சாலையின் பக்கவாட்டு நுழைவு வாயில் அருகே உள்ள ரயில் பவன் சந்திப்பு வரை பல ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். வேறு வழியின்றி தடியடி, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி காவல் துறையினர் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றபோதிலும், 60}க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களும் 100}க்கும் மேற்பட்ட காவல் துறையினரும் காயமடைந்தனர்.

எண்ம உத்திகள்: சிஜேபி ஆதரவாளர்களின் திடீர் எழுச்சிக்குப் பின்னால் அதன் அதிநவீன தொழில்நுட்ப உத்தி இருப்பதாக அவர்களின் நடவடிக்கைகளை உற்று கவனிக்கும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அபிஜீத் தீப்கே மற்றும் அவரது தலைமையில் இயங்கும் குழுவினர் ஒரு பகுதிதான் என்றாலும், இவர்களின் பின்னால் அணிவகுத்து ஜந்தர் மந்தர் பகுதிக்கு வருவோர் எவரும் இவர்களின் தலைமையை ஏற்றுக் கொண்டவர்களாக வரவில்லை. அவர்களை வழிநடத்தவும் களத்தில் எவருமில்லை.

இணையதளம், பிரசார படங்கள் மற்றும் செயல்திட்டம் அனைத்துமே சாட்ஜிபிடி, கிளாட் ஏஐ போன்ற செயற்கை நுண்ணறிவு செயலிகள் மூலம் போராட்டக் களத்திலேயே வடிவமைக்கப்பட்டு இணையத்தில் பரப்பப்படுகின்றன. சுயாதீனமாக இளைஞர்கள் போராட்டக் களத்துக்கு வந்து பிறகு கலைந்து செல்கிறார்கள்.

சிஜேபியால் முன்னெடுக்கப்படும் போராட்டமாக இருந்தாலும், இதன் பின்னணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இளைஞர் பிரிவுகளும், மாணவர் பிரிவுகளும்தான் பெரும் பங்கு வகிக்கின்றன. இளைஞர்களைத் திரட்டுவதிலும், ஒருங்கிணைப்பதிலும் அவர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

கரப்பான்பூச்சிப் போராட்டத்தால் காங்கிரஸ் பின்னுக்குத் தள்ளப்படும் ஆபத்தை உணர்ந்து, நீட் வினாத்தாள் கசிவு, அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் உள்ளிட்ட அதே கோரிக்கைகளை முன்வைத்து எதிர்க்கட்சித் தவைவர் ராகுல் காந்தி தலைமையில் தனியாகப் போராட்டம் நடத்தியது போராட்டத்தை சற்று பாதித்திருக்கிறது. அண்ணா ஹசாரேயின் "ஊழலுக்கு எதிரான இயக்கம்' போல, கப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டமும் நாடு தழுவிய அளவில் வலுப்பெறுமா என்பதை இப்போதே சொல்ல முடியவில்லை. பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உல்ள எதிர்க்கட்சிகள் இந்தப் போராட்டத்தைக் கையில் எடுக்கும்போது, அது மறைமுகமாக "ஆம் ஆத்மி' கட்சியைப்போல, புதிதாக இன்னொரு எதிர்க்கட்சியை உருவாக்கக்கூடும். அது அவர்களுக்கே பலவீனமாக மாறலாம் என்பதால், அரசியல் கட்சிகள் முழு முனைப்புடன் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். இப்போதைக்கு இடதுசாரி கட்சிகள்ஆதரவுடன் நடக்கும் போராட்டமாகத்தான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் காட்சி அளிக்கிறது.

சர்வதேச சர்ச்சைகள்: சிஜேபி முறையான அரசியல் கட்சியாக இல்லாததால், பெருநிறுவன நிதியின்றி முழுக்க முழுக்க "திரள் நிதி' மூலம் செயல்படுவதாக கூறுகிறார் சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ்.

இந்தப் போராட்டம் தீவிரமடைந்தபோது, வெளிநாட்டில் இயங்கும் "சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்' என்ற இந்தியாவில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் கோரும் சீக்கிய அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன் நிதியுதவி அளிப்பதாக அறிவித்தார். ஆனால், சிஜேபி அதை நிராகரித்து, எந்த தீவிரவாத அமைப்புடனும் தொடர்பில்லை எனத் தெளிவுபடுத்தியது. சிஜேபி போராட்டத்தில் வெளிநாட்டுச் சதி உள்ளதாக அதிகாரபூர்வ மற்றும் சட்டபூர்வ ஆதாரங்கள் எதுவும் நீதிமன்றங்களில் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. இருந்தபோதிலும், சிஜேபி மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகளின் செயல்பாடுகள் உளவுத் துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

எதிர்காலம் என்ன?: போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, வினாத்தாள் கசிவுக்கு எதிராக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜூலை 23) அறிவித்தார். இருப்பினும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்யும்வரை போராட்டம் தொடரும் என சிஜேபி உறுதியாக உள்ளது.

இங்கு களத்தில் உள்ளவர்களிடம் உரையாடியபோது, வங்கதேச மாணவர் போராட்டம், இலங்கை ராஜபட்ச ஆட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சி மற்றும் ஹாங்காங் குடைப் போராட்டங்கள் குறித்த ஞானத்தை நுனிநாக்கு ஆங்கிலத்தில் விவரிக்கிறார்கள். எவரது கட்டுப்பாட்டிலும் இல்லாத இந்த "ஜென்}ஸீ' இளைஞர்களின் அடுத்தகட்ட நகர்வு, இப்போதைக்கு திசை தெரியாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது.

summary

Cockroach shadow power

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments