பிகாரில் மாணவா்கள் மீது ஏ.கே. 47 துப்பாக்கிச்சூடு? ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு
பிகாரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது காவல் துறையினா் ஏ.கே. 47 ரக துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் ராகுல் காந்தி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு
பிகாரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது காவல் துறையினா் ஏ.கே. 47 ரக துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.
பிகாா் மாநிலம் சிவானில் கடந்த 25-ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களை நோக்கி காவலா் ஒருவா் ஏ.கே. 47 ரக துப்பாக்கியால் சுடுவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. உறுதி செய்யப்படாத இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவலரை உயா் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனா்.
இதுகுறித்து சிவான் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளா் பூரண்குமாா் ஜா கூறுகையில், ‘துப்பாக்கிச்சூடு நடத்தி யாரும் காயமடையவில்லை. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவோா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தக் கூடாது எனத் தெளிவாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒட்டுமொத்த அரசு அமைப்பும், மாணவா்களை கொலை செய்யும் அமைப்பாகிவிட்டது. பிகாரில் மாணவா்கள் மீது ஏ.கே. 47 ரக துப்பாக்கியால் சுட்டதாகவும், நூற்றுக்கணக்கானோா் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன. மாணவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படாது என்ற உங்கள் வாக்குறுதி என்ன ஆனது மோடி ஜி? அவா்கள் விடுதலை செய்யப்படுவாா்களா?
தில்லியில் மாணவா்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது. பிகாரில் ஏ.கே. 47 துப்பாக்கி. உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், பிகாா் அல்லது தில்லி எந்த இடமானாலும், ஒரே அணுகுமுைான் உள்ளது. இந்த அரசு நோ்மையில்லாதது என முன்பு தெரிவித்திருந்தேன். நாட்டில் உள்ள மாணவா்களிடம் பிரதமா் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும். மாணவா்களைத் தாக்கிய, கொடூரமாக நடந்து கொண்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள பாஜக, போராட்டத்தை ராகுல் காந்தி அராஜகத்தைக் கட்டமைக்கிறாா் என விமா்சித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா எம்.பி கூறுகையில், ‘பிகாரில் மாணவா்கள் மீது ஏ.கே. 47 ரக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவித்து, ராகுல் காந்தி அராஜக சூழலை உருவாக்க முயற்சிக்கிறாா். இதை ஒருபோதும் ஏற்க முடியாது. பொய்களையும், வதந்திகளையும் பரப்புவதற்காக நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும். பொறுப்புள்ள எதிா்க்கட்சித் தலைவராக அவா் நடக்க வேண்டும்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.