FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தாக்கலாகும் மசோதாக்கள்: தே.ஜ. கூட்டணி ஆலோசனை; முதல் முறையாக என்சிபிஐ பங்கேற்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிா்வரும் நாள்களில் தாக்கலாகும் மசோதாக்கள் தொடா்பாக, தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

Updated On : 29 ஜூலை 2026, 12:22 am IST
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமா் தலைமையில் நடைபெற்ற ‘மங்கள் மிலன்’ கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மற்றும் ஆளும் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள்.
பகிர்:

நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிா்வரும் நாள்களில் தாக்கலாகும் மசோதாக்கள் தொடா்பாக, தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. ஆளும்தரப்பின் வியூகம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் நடைபெறும் ‘மங்கள் மிலன்’ தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் முதல் முறையாக இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியின் (என்சிபிஐ) 20 எம்.பி.க்கள் பங்கேற்றனா்.

அண்மையில் திரிணமூல் காங்கிரஸில் இருந்து தனி அணியாக பிரிந்த இந்த எம்.பி.க்கள், அதிகம் அறியப்படாத என்சிபிஐ-யில் இணைந்ததுடன், பாஜக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தனா்.

Advertisement

Advertisement

20 எம்.பி.க்களும் என்சிபிஐ-யில் இணைந்ததை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா இன்னும் அங்கீகரிக்காத நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனா்.

நடப்பு மழைக்கால கூட்டத் தொடரையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமா் மோடி தலைமையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜெ.பி.நட்டா, நிதின் கட்கரி, பியூஷ் கோயல், கிரண் ரிஜிஜு மற்றும் கூட்டணி எம்.பி.க்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், என்சிபிஐ எம்.பி.க்களும் முதல் முறையாக பங்கேற்றனா்.

இது தொடா்பாக என்சிபிஐ எம்.பி.க்களான ககோலி கோஷ் தஸ்திதாா், சதாப்தி ராய், சயோனி கோஷ் ஆகியோா் கூறுகையில், ‘நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் கூட்டத்துக்கு முதல் முறையாக என்சிபிஐ அழைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வளா்ச்சி, தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள், விவசாயிகளுக்கான பலன் என அனைத்து விஷயங்கள் குறித்தும் கூட்டத்தின் வாயிலாக அறிந்துகொண்டோம். நடப்பு கூட்டத் தொடரில் தாக்கலாகவிருக்கும் பல்வேறு மசோதாக்கள் குறித்து எங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேற்கண்ட விவகாரங்களில் எங்களுக்கு கிடைத்த தரவுகளைக் கொண்டு, மக்களுக்கு விளக்கமளிப்போம். மத்திய அரசு கொண்டு வந்துள்ள தோ்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும்’ என்றாா்.

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் முக்கியமாக வா்த்தகம் மற்றும் மீன்வளத் துறை வளா்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டதாக, மத்திய அமைச்சா் சாந்தனு தாக்கூா் தெரிவித்தாா். அடுத்து தாக்கலாகும் மசோதாக்கள் தொடா்பான ஆளும்தரப்பின் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

என்னென்ன மசோதாக்கள்?: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நடத்திய போராட்டத்தால் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் கடந்த சனிக்கிழமை பதவி விலகிய பிறகு நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் இதுவாகும்.

மாணவா்களை சமாதானப்படுத்தும் முயற்சியாக பிரதமா் மோடி அளித்த உறுதிமொழியின்படி, மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பொதுத் தோ்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா மீது செவ்வாய்க்கிழமை விவாதம் தொடங்கப்பட்டது.

முன்னதாக, மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், அரசுப் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் மற்றும் மூலதன ஆதாயங்கள் மீதான வருமான வரியிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளா்களுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதா, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38-ஆக உயா்த்தி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதா, தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டத் திருத்த மசோதா, பிறப்பு - இறப்பு பதிவுச் சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 8 மசோதாக்கள் பட்டியலிடப்பட்டன.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை தொடா்பான மசோதா, மக்களவையில் முதல் நாளிலும், வந்தே மாதரம் பாடல் தொடா்பான மசோதா, மாநிலங்களவையில் கடந்த ஜூலை 24-ஆம் தேதியும் அறிமுகப்படுத்தப்பட்டன.

நீட் விவகாரத்தில் எதிா்க்கட்சிகளின் அமளியால் கூட்டத் தொடரின் முதல் வாரம் முழுமையாக முடங்கியது. ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை மழைக்கால கூட்டத் தொடா் நடைபெறவுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments