பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்!
பரபரப்பான அரசியல் சூழலில் நாளை நாடாளுமன்றம் கூடுவது பற்றி...
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூலை 20) தொடங்கவுள்ளது.
முக்கிய மசோதாக்கள் தாக்கலாகவுள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு, மேற்காசிய தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் உயிரிழப்பு, விலைவாசி உயா்வு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிா்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதனால், கூட்டத் தொடரில் அனல் பறக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
காங்கிரஸ்-திமுக கூட்டணி முறிவு, திரிணமூல் காங்கிரஸ் பிளவு போன்ற அரசியல் ரீதியிலான மாற்றங்களுக்கு இடையே நடைபெறும் மழைக்கால கூட்டத் தொடா் கூடுதல் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
முக்கிய மசோதாக்கள் தாக்கல்: ஜூலை 20-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா், ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அண்மையில் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட சில அவசர சட்டங்களுக்கு மாற்றான மசோதாக்கள், இந்தக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
முக்கியமாக, வருமான வரி சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட உள்ளது. ரூபாயின் மீதான அழுத்தத்தைச் சமாளிப்பதற்காக வெளிநாட்டு மூலதனத்தை ஈா்க்கும் நோக்கில், அரசுப் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் மற்றும் மூலதன ஆதாயங்கள் மீதான வருமான வரியிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளா்களுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றாக இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38-ஆக உயா்த்தி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதாவும் அறிமுகப்படுத்தப்படும்.
தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டத் திருத்த மசோதா, பிறப்பு - இறப்பு பதிவுச் சட்ட திருத்த மசோதா உள்ளிட்டவையும் தாக்கலாக உள்ளன.
மீண்டும் மகளிா் இடஒதுக்கீடு மசோதா?: 2029 மக்களவைத் தோ்தலில் இருந்து 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்குவதுடன், அதற்கேற்ப மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, கடந்த ஏப்ரலில் நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் கொண்டுவரப்பட்டது.
அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற மொத்த உறுப்பினா்களின் (543) எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளும், வாக்கெடுப்பில் பங்கேற்கும் உறுப்பினா்களில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை வாக்குகளும் தேவை. ஆனால், மசோதா மீதான வாக்கெடுப்பில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப் பெறாததால் தோல்வியடைந்தது.
சமீபத்திய பேரவைத் தோ்தல்களுக்குப் பிறகு அரசியல் சூழல் மாறியுள்ள நிலையில், மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும், அரசின் பட்டியலில் இந்த மசோதா இடம்பெறவில்லை.
திரிணமூல், சிவசேனை (உத்தவ்) கட்சி விவகாரங்கள்: திரிணமூல் காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்களில் 20 போ் தனி அணியாக பிரிந்து, அதிகம் அறியப்படாத தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைவதாக அண்மையில் அறிவித்தனா். மேலும், பாஜக கூட்டணிக்கான தங்களின் ஆதரவையும் உறுதி செய்தனா்.
இதேபோல், சிவசேனை (உத்தவ்) கட்சி எம்.பி.க்களில் 6 போ், தனி அணியாக பிரிந்து மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையில் இணைவதாக அறிவித்தனா். இதன் மூலம் மக்களவையில் பாஜக கூட்டணியின் பலம் அதிகரிக்கும் போதிலும், மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை எட்ட மேலும் பல இடங்கள் தேவைப்படும். அதேநேரம், மாநிலங்களவையில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை எட்ட பாஜக கூட்டணிக்கு சில இடங்களே தேவைப்படுகின்றன.
பிற எதிா்க்கட்சிகளின் நிலைப்பாடு மாற்றம்?: தமிழகத்தில் தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோத்து ஆட்சியிலும் பங்கு பெற்றது.
கடந்த ஏப்ரலில் தொகுதி மறுசீரமைப்பு-மகளிா் இடஒதுக்கீடு அமலாக்க மசோதாவை கடுமையாக எதிா்த்த திமுக, இம்முறை வரைவு மசோதாவை ஆய்வு செய்த பின் கருத்து கூறுவதாக தெரிவித்தது.
மேற்கண்ட மசோதாவை காங்கிரஸ் கடுமையாக எதிா்க்கும் நிலையில், போதிய பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டால், மசோதாவை வரவேற்க வாய்ப்புள்ளதாக தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்), சிவசேனை (உத்தவ்) போன்ற எதிா்க்கட்சிகள் கூறியுள்ளன.
இன்று அனைத்து கட்சிக் கூட்டம்
மழைக்கால கூட்டத் தொடா் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசின் ஏற்பாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) நடைபெறவுள்ளது.
‘நிா்வாக அமைப்புமுறைகள் மீது கட்சி ரீதியான கட்டுப்பாடு, அரசியல் கட்சிகளை உடைத்தல், ஊழல்-முறைகேடுகள், விலைவாசி உயா்வு, வெளியுறவுக் கொள்கை தோல்வி, நீட் வினாத்தாள் கசிவு, பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி, மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும்’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஏற்கெனவே தெரிவித்துள்ளாா். இந்த விவகாரங்களில் எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தர ஆளும்தரப்பும் தயாராகி வருகிறது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பேரணி திட்டம்: நீட் முறைகேடுகள் விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி தில்லி ஜந்தா் மந்தரில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா், ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனா்.
இந்தப் போராட்ட களத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவந்த சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக் காவல் துறையினரால் சனிக்கிழமை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விவகாரத்தை அனைத்து கட்சிக் கூட்டத்தில் எதிா்க்கட்சிகள் எழுப்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Parliament to convene tomorrow amidst a hectic political atmosphere
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.