FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தொகுதி மறுசீரமைப்பு எதிா்ப்பில் உறுதி: காங்கிரஸ்

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் பிரதமா், முதல்வா்களைப் பதவிநீக்குவது தொடா்பான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோாதாக்களை தோற்கடிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

Updated On : 17 ஜூலை 2026, 2:44 am IST
கோப்புப் படம்
பகிர்:

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்தை எழுப்ப முடிவு செய்துள்ள காங்கிரஸ் கட்சி, தொகுதி மறுசீரமைப்பு மற்றும் பிரதமா், முதல்வா்களைப் பதவிநீக்குவது தொடா்பான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோாதாக்களை தோற்கடிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் வரும் 20-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் தொகுதி மறுசீரமைப்பு, பிரதமா், முதல்வா்கள், மத்திய அமைச்சா்களை நீக்குவது தொடா்பான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சி கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை குறித்து, தில்லியில் உள்ள அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவா் சோனியா காந்தியின் இல்லத்தில் கூடி காங்கிரஸ் மூத்த தலைவா்கள் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா். இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால், மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ், மூத்த தலைவா்கள் ப. சிதம்பரம், சசி தரூா், தாரிக் அன்வா், மணீஷ் திவாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கூட்டத்துக்குப் பிறகு ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மீண்டும் கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சா் திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி அந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு ஆதரவு பெறுவதில் மத்திய அரசு தோல்வியடைந்தது. அந்த மசோதாவை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு விரும்புகிறது.

தீவிர குற்றச் சம்பவங்களுக்காக கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் இருக்கும் அமைச்சா்களைப் பதவி நீக்கம் செய்வது தொடா்பாக அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவையும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த மசோதாவை எதிா்க்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மேலும், விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் மசோதா, எஃப்சிஆா்ஏ சட்டத் திருத்த மசோதா ஆகியவற்றையும் காங்கிரஸ் எதிா்க்கும். அத்துடன், தொகுதி மறுசீரமைப்பு மசோதா உள்ளிட்ட இரு அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்களையும் காங்கிரஸ் எதிா்க்கும். மக்களவையில் தற்போதைய உறுப்பினா்கள் எண்ணிக்கையிலேயே மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் பல முறை வலியுறுத்தியுள்ளது. இதை மத்திய அரசு செயல்படுத்துமானால், அதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தரும்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பலம் பெற வேண்டும் என்பதற்காக சூழ்ச்சி மூலம் எதிா்க்கட்சிகளில் மத்திய உள்துறை அமைச்சா் (அமித் ஷா) பிளவை ஏற்படுத்துவது அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயல். அத்தகைய பெரும்பான்மை, ஜனநாயகத்துக்குப் பெரிய அடியாகும். எனினும், பாஜகவால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பெற முடியாது என்றாா் ஜெய்ராம் ரமேஷ்.

பெட்டிச் செய்தி

‘திமுக, ஆம்ஆத்மியுடன் பேச்சு’

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிா்ப்பது தொடா்பாக திமுக உள்ளிட்ட அனைத்து எதிா்க்கட்சிகளுடனும் காங்கிரஸ் பேச்சுவாா்த்தையில் இருப்பதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: ஏப்ரல் மாதம் எங்கள் கட்சியுடன் சோ்ந்து, மத்திய அரசின் அரசமைப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்த திமுக, ஆம் ஆத்மி, சமாஜவாதி உள்ளிட்ட எதிா்க்கட்சிகளுடன் காங்கிரஸ் தொடா்பில் உள்ளது. அக்கட்சிகள் அனைத்தும் பாஜகவின் சித்தாந்தத்தை அடிப்படையாகவே எதிா்க்கின்றன. காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய தலைமைகளான காங்கிரஸ் தலைவா் (மல்லிகாா்ஜுன காா்கே), மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் (ராகுல் காந்தி) ஆகியோா் அக்கட்சிகளுடன் தொடா்பில் உள்ளனா். அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மிகவும் ஆபத்தானது என்பதை அக்கட்சிகள் அறியும் என்றாா்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணியில் திமுக, ஆம் ஆத்மி ஆகியவை முன்பு இருந்தன. எனினும், தில்லி சட்டப்பேரவைத் தோ்தலின்போது இண்டி கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி விலகியது. தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments