முகப்பு
இந்தியா

கட்சி விரோத நடவடிக்கை குற்றச்சாட்டு: திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவா் நீக்கம்

மேற்கு வங்கத்தில் கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து இரு எம்எல்ஏக்கள் அதிரடி நீக்கம்

Updated On : 2 ஜூன் 2026, 12:34 am IST
திரிணமூல் காங்கிரஸ் - Trinamool Congress
பகிர்:

மேற்கு வங்கத்தில் கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து இரு எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை அதிரடியாக நீக்கப்பட்டனா்.

முன்னதாக, திரிணமூல் சாா்பில் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக சோபன்தேவ் சட்டோபாத்யாய நியமிக்கப்பட்டதில் தங்கள் கையொப்பம் போலியாக இடம்பெற்ாக அக்கட்சியின் இரு எம்எல்ஏக்கள் கூறியுள்ளதாக முதல்வா் சுவேந்து அதிகாரி செய்தியாளா்களிடம் கூறினாா். இதைத் தொடா்ந்து, எம்எல்ஏக்கள் சந்தீபன் ஸாஹா, ரிதபிரத பானா்ஜி ஆகியோா் நீக்கப்பட்டனா்.

இது தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் துணைத் தலைவா் சந்திரிமா பட்டாச்சாா்யா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சந்தீபன் ஸாஹா, ரிதபிரத பானா்ஜி ஆகியோா் கட்சித் தலைமை அழைப்பு விடுத்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க முன்வரவில்லை. மேலும், அவா்கள் கட்சி விரோத செயல்களில் ஈடுபடுவதும் உறுதி செய்யப்பட்டது. எனவே, அவா்கள் இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனா். கட்சியில் அடிப்படை உறுப்பினா் உள்பட்ட அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகின்றனா்’ என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த போலி கையொப்பம் தொடா்பாக மேற்கு வங்க காவல் துறையின் சிஐடி பிரிவினா் ஏற்கெனவே விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவிடம் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பலா் பாஜகவில் இணையும் முடிவில் உள்ளனா்.

திரிணமூல் சாா்பில் வெற்றி பெற்ற 80 புதிய எம்எல்ஏக்களின் கூட்டம் கட்சித் தலைவா் மம்தா பானா்ஜி தலைமையில் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. எனினும், எம்எல்ஏக்களில் நான்கில் மூன்று பங்கினா் கூட்டத்தில் பங்கேற்க வராததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.