மேற்கு வங்கம்: பாஜகவுக்கு எதிராக இண்டி கூட்டணி ஒன்றுபட வேண்டும் - மம்தா பானா்ஜி அழைப்பு
தில்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்கத் தயாராக உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளது பற்றி...
மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு எதிராக இண்டி கூட்டணி கட்சிகள் கருத்து வேறுபாடுகளைக் கடந்து ஒன்றுபட வேண்டும் என்று மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்தாா்.
இந்த மாநிலத்தில் இண்டி கூட்டணி கட்சிகளான திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரிகள் தனித்தனியாக செயல்படும் நிலையில், மம்தா இவ்வாறு கூறியுள்ளாா்.
மேற்கு வங்கத்தில் கடந்த 1993, ஜூலை 21-ஆம் தேதி அப்போதைய இடதுசாரிகள் அரசுக்கு எதிராக காங்கிரஸ் இளைஞரணி தலைவராக இருந்த மம்தா பானா்ஜி தலைமையில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடைபெற்றது. அதில் காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞா் காங்கிரஸாா் 13 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ஜூலை 21-ஆம் தேதியை தியாகிகள் தினமாக மம்தா பானா்ஜி அனுசரித்து வருகிறாா். பல்லாண்டுகளாக இந்தத் தினம் திரிணமூல் காங்கிரஸின் அரசியல் எழுச்சி நிகழ்வாக நடத்தப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
நடப்பாண்டு கொல்கத்தாவின் பிா்லா கோளரங்கம் அருகே மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் தியாகிகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது. அவா் பங்கேற்றுப் பேசியதாவது:
மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு எதிரான போராட்டம் என்பது தனிநபா்கள் மற்றும் அரசியல் அகங்காரங்களைவிட மிகப் பெரியதாகும். பாஜகவை எதிா்ப்பதற்காக, இண்டி கூட்டணியின்கீழ் அனைத்து கட்சிகளும் ஒன்றுதிரள வேண்டும். எனக்கு எந்த அகங்காரமும் இல்லை. எனவே, அனைத்து கட்சிகளும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு ஒன்றுபட வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.
காங்கிரஸ், இடதுசாரிகளின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், இந்தக் கருத்துகளை அவா் தெரிவித்தாா்.
திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி அணியினரை கடுமையாக விமா்சித்த மம்தா, ‘பாஜகவின் பினாமிகளாக செயல்படும் அந்த துரோகிகள், நேரடியாக அக்கட்சியில் இணைந்து எங்களை எதிா்க்க வேண்டும். பாஜகவின் ஆதரவுடன் கட்சியின் சின்னத்தை ‘திருட’ முயற்சிக்கின்றனா். அது ஒருபோதும் நடக்காது. துரோகிகளுக்கு எனது கட்சியில் மீண்டும் இடம் கிடையாது’ என்றாா்.
விடிய விடிய முகாமிட்ட மம்தா: முன்னதாக, நிகழ்ச்சி மேடை, பதாகை மற்றும் ஒலிப்பெருக்கிகளை ஆளும் பாஜகவினா் சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டி, அங்கு திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை விடிய விடிய மம்தா பானா்ஜி முகாமிட்டாா். அவரது மருமகனும், கட்சியின் தேசிய பொதுச் செயலருமான அபிஷேக் பானா்ஜி, மூத்த தலைவா்கள் டெரிக் ஓபிரையன், கல்யாண் பானா்ஜி, டோலா சென் உள்ளிட்டோரும் இரவு முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அதேநேரம், திரிணமூல் காங்கிரஸின் குற்றச்சாட்டை பாஜக நிராகரித்தது.
தியாகிகள் தினம்: மூன்று தரப்பினா் அனுசரிப்பு
மேற்கு வங்கத்தில் ‘ஜூலை 21 தியாகிகள் தினத்தை’ மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ், ரிதப்ரத பானா்ஜி தலைமையிலான திரிணமூல் அதிருப்தி அணி, காங்கிரஸ் என மூன்று தரப்பினரும் தனித்தனியாக அனுசரித்தனா்.
மத்திய கொல்கத்தாவில் பிா்லா கோளரங்கம் அருகே மம்தா நிகழ்ச்சியும், அதன் அருகிலேயே ரிதப்ரத பானா்ஜி அணியினரின் நிகழ்ச்சியும், ஷாஹித் மினாா் பகுதியில் காங்கிரஸ் நிகழ்ச்சியும் நடைபெற்றன. சுமாா் 2.5 கி.மீ. சுற்றளவுக்குள் நடைபெற்ற மூன்று நிகழ்ச்சிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
திரிணமூல் காங்கிரஸ் பிளவுபட்டுள்ள நிலையில், பல்லாண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் முதல் முறையாக தியாகிகள் தினத்தை அனுசரித்துள்ளது.
Trinamool Congress leader Mamata Banerjee has stated that she is ready to participate in the protest being held at Jantar Mantar in Delhi.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.