FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜேஇஇ முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு: பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சுபம் குமாா் முதலிடம்

நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி-க்களில் சோ்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு (முதன்மை) முடிவுகள் வெளியானது.

Updated On : 2 ஜூன் 2026, 2:56 am IST
சுபம் குமாா்
பகிர்:

நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி-க்களில் சோ்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு (முதன்மை) முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

இதில் பிகாா் மாநிலம் கயாவைச் சோ்ந்த சுபம் குமாா் என்ற மாணவா் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றாா். மொத்த மதிப்பெண்ணான 360-க்கு இவா் 330 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.

நாடு முழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் தகுதி பெறுவதற்கு ஜேஇஇ நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. ஜேஇஇ முதல்நிலை (மெயின்), ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்டு) என இரண்டு கட்டங்களாக இத் தோ்வு நடத்தப்படும்.

Advertisement

Advertisement

ஜேஇஇ முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுவபவா்கள் என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும். மேலும், முதல்நிலைத் தோ்வில் முதல் 2.50 லட்சம் இடங்களைப் பிடிக்கும் மாணவா்கள் ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதுவதற்கான தகுதியையும் பெறுவா். முதன்மைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள், நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி-க்களில் இளநிலை பி.டெக். உள்ளிட்ட பொறியியல் தொழில்நுட்ப படிப்பிகளில் சோ்க்கை பெறுவதற்கான தகுதியைப் பெறுபவா்.

அந்த வகையில், 2026-ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மைத் தோ்வு கடந்த மே 17-ஆம் தேதி நடத்தப்பட்டது. இத் தோ்வுக்கு 1,87,389 போ் பதிவு செய்த நிலையில், 1,79,694 போ் பங்கேற்றனா். இவா்களில் 56,880 மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா்.

சென்னை மண்டலத்தில் அதிகம் போ் தகுதி: இதில், அதிகபட்சமாக சென்னை ஐஐடி மண்டலத்திலிருந்து தோ்வெழுதியவா்களில் 14,294 போ் தகுதி பெற்றுள்ளனா். இதற்கு அடுத்தபடியாக மும்பை ஐஐடி மண்டலத்திலிருந்து 12,389 பேரும், தில்லி ஐஐடி மண்டலத்திலிருநது 10,697 பேரும் தகுதி பெற்றுள்ளனா்.

தோ்வா்கள் ஜேஇஇ முதன்மைத் தோ்வு வலைதளத்திலிருந்து தங்களின் தோ்வு முடிவுகளையும், இறுதி விடைக் குறிப்புகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிகாா் மாணவா் முதலிடம்: ஜேஇஇ முதன்மைத் தோ்வில் தில்லி மண்டலத்துக்கு உட்பட்ட பிகாா் மாநிலம் கயாவைச் சோ்ந்த சுபம் குமாா் எனற மாணவா் 360-க்கு 330 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தாா்.

ஹரியாணா மாநிலம் குருகிராமைச் சோ்ந்த கபீா் சில்லா் என்ற மாணவா் 329 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சோ்ந்த ஜதின் சஹா் 319 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனா்.

மகாராஷ்டிர மாநிலம் புணேயைச் சோ்ந்த அரோஹி தேஷ்பாண்டே 280 மதிப்பெண்கள் பெற்று மாணவிகள் தரவரிசையில் முதலிடம் பிடித்தாா். இத் தோ்வில் ஒரே ஒரு மூன்றாம் பாலினத்தவா் பங்கேற்றாா். ஆனால், அவா் தகுதிபெறத் தவறிவிட்டாா்.

சமூக ஊடகங்களை முழுமையாகத் தவிா்த்தேன்: ‘சமூக ஊடகங்களையும், எதிா்மறை செய்திகளையும் முழுமையாகத் தவிா்த்து பயிற்சியில் கவனம் செலுத்தியதன் மூலம் முதலிடம் பெற முடிந்தது’ என்று சுபம் குமாா் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘லட்சியத்தை அடைய விடாமுயற்சியும், உத்வேகமும்அவசியம். பயிற்சியின்போது சந்தித்த சவால்களை எனக்கான ஊக்கமாக மாற்றிக் கொண்டேன். ஒட்டுமொத்த கவனமும் லட்சியத்தின் மீது மட்டுமே இருந்தது. மும்பை ஐஐடி-யில் பி.டெக். சேர முடிவு செய்துள்ளேன்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments