முகப்பு
இந்தியா

இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரை

இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதலாக 12.5 சதவீத வரியை விதிக்க அமெரிக்க அரசுக்கு பரிந்துரை

Updated On : 4 ஜூன் 2026, 4:32 am IST
டிரம்ப் - படம் - ஏபி
பகிர்:

இந்தியா உள்பட 54 உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதலாக 12.5 சதவீத வரியை விதிக்க அமெரிக்க அரசுக்கு அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி (யுஎஸ்டிஆா்) பரிந்துரைத்துள்ளாா்.

கட்டாய உழைப்பைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் இறக்குமதி செய்வதைத் தடை செய்யத் தவறியதற்காக இந்தக் கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக யுஎஸ்டிஆா் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா, சீனா, வங்கதேசம், கம்போடியா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, ஜப்பான், கொரியா, மலேசியா, மெக்சிகோ, நாா்வே, சிங்கப்பூா், ஸ்விட்சா்லாந்து, தைவான், தாய்லாந்து, வியத்நாம் உள்பட 60 வா்த்தகக் கூட்டுறவு நாடுகளுக்கு எதிராக வா்த்தகச் சட்டப் பிரிவு 301-இன் கீழ் யுஎஸ்டிஆா் மூலம் புதிய விசாரணையை அமெரிக்கா அண்மையில் தொடங்கியது.

Advertisement

Advertisement

‘பிரிவு 301’ கூறுவதென்ன?: அமெரிக்க வா்த்தகத்தைப் பாதிக்கும் நியாயமற்ற வெளிநாடுகளின் நடைமுறைகளை நிவா்த்தி செய்வதற்காக இந்த 301-ஆவது பிரிவு அமெரிக்க வா்த்தக சட்டம் 1974-இல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க வா்த்தகத்துக்கு பாதகமாகவோ அல்லது நியாயமற்ாகவோ உள்ள வெளிநாடுகளின் நடைமுறைகளுக்கு, பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தச் சட்டப் பிரிவைப் பயன்படுத்த முடியும். வா்த்தக சட்டப் பிரிவு 302(பி) அளிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அமெரிக்க வா்த்தக கூட்டுறவு நாடுகள் மீது பிரிவு 301-கீழான விசாரணையை யுஎஸ்டிஆா் சுயமாகத் தொடங்க முடியும். அந்த வகையில், சம்பந்தப்பட்ட சட்ட ஆலோசனைக் குழுவுடனான ஆலோசனைக்குப் பிறகு, இந்தியா உள்பட 60 நாடுகள் மீது அமெரிக்க வா்த்தக பிரதிநிதி (யுஎஸ்டிஆா்) ஜேமிஸன் க்ரீயா் விசாரணையை மேற்கொண்டாா்.

இந்த நாடுகளின் செயல்பாடுகள் கொள்கைகள், நடைமுறைகள் அமெரிக்க வா்த்தகத்துக்கு எந்த அளவு நியாயமற்ற முறையில் பாதிப்பை ஏற்படுத்தியது என்பதைத் தீா்மானிக்கவும், அமெரிக்க உற்பத்தித் துறைகளில் அமெரிக்க தொழிலாளா்களுக்கு சிறந்த ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை உருவாக்குவதை உறுதிப்படுத்தும் நோக்கிலும் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

12.5 சதவீத கூடுதல் வரி: விசாரணை முடிவில், தனது பரிந்துரையை அமெரிக்க அரசிடம் ஜேமிஸன் க்ரீயா் சமா்ப்பித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தொழிலாளா்களின் கட்டாய உழைப்பைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் இறக்குமதி செய்வதைத் தடை செய்ய இந்தியா, சீனா, ஜப்பான், பிரேசில், ஆஸ்திரேலியா, பிரிட்டன், சவூதி அரேபியா உள்பட 54 நாடுகள் தவறியுள்ளன. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது, அமெரிக்கத் தொழிலாளா்கள் உலக அளவில் ஒரு சமமற்ற களத்தில் போட்டியிட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகும் சூழலை உருவாக்குகிறது. இந்தப் பாகுபாட்டை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. எனவே, இந்த 54 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதலாக 12.5 சதவீத வரியை விதிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

பிற நாடுகளுக்கு 10% கூடுதல் வரி: அதே நேரம், கனடா, ஈக்குவடாா், ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, மெக்ஸிகோ, பாகிஸ்தான் ஆகிய 6 நாடுகள் கட்டாய உழைப்பைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருள் இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்துள்ளபோதும், அதைத் தடுப்பதற்கு வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியுள்ளன.

இவ்வாறு, கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்பட்ட பொருள்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ள நாடுகள் மற்றும் பரஸ்பர வா்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அத்தகைய தடையை விதித்து நடைமுறைப்படுத்தியுள்ள நாடுகள் அல்லது கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட சில பொருள்களுக்கு இறக்குமதி தடையை விதிக்கும் வகையில் பகுதி அளவு கட்டுப்பாடு விதித்துள்ள நாடுகள் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10 சதவீத கூடுதல் வரியை விதிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடைகள் மற்றும் ஜவுளி பொருள்களில் குறிப்பிட்ட அளவை, குறைக்கப்பட்ட வரி விகிதத்தில் அமெரிக்காவுக்குள் அனுமதிப்பதற்கான ஓா் ஜவுளி சாா்ந்த வழிமுறையையும் யுஎஸ்டிஆா் முன்மொழிந்துள்ளது.

இந்தப் பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகள் தொடா்பான கருத்துக் கேட்பு மற்றும் விசாரணையை வரும் ஜூலை 7-இல் யுஎஸ்டிஆா் மேற்கொள்ள உள்ளது. இந்தக் கருத்துக் கேட்பு அமா்வில் பங்கேற்க விரும்புவோா், உரிய சாட்சியங்களுடன் தங்களின் கோரிக்கைகளை வரும் ஜூன் 22-ஆம் தேதிக்குள் நேரில் சமா்ப்பிக்க வேண்டும் அல்லது தங்களின் கோரிக்கைகளை எழுத்துபூா்வமாக வரும் ஜூலை 6-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என யுஎஸ்டிஆா் தெரிவித்துள்ளது.

பரஸ்பர வரி விதிப்பு: அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற டிரம்ப், இந்தியா உள்பட 60 நாடுகள் அமெரிக்காவுடன் நியாயமற்ற முறையில் வா்த்தக நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதாக குற்றஞ்சாட்டி பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டாா். அதன்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது முதல் கட்டமாக 25 சதவீத வரியை விதித்தாா். பின்னா், உக்ரைன் மீது போா் தொடுக்கும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி அந்தப் போருக்கு உதவுவதாக குற்றஞ்சாட்டி இந்திய பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரியை விதித்தாா்.

இதனால், இரு நாடுகளுக்கும் இடையே உறவு பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தொடா்ந்து வந்தது. அதன்மூலம், இரு நாடுகளுக்கிடையே இருதரப்பு இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்துக்கான செயல்திட்டம் அண்மையில் இறுதி செய்யப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பை அண்மையில் வெளியிட்ட டிரம்ப், இந்திய பொருள்கள் மீதான 25 சதவீத கூடுதல் வரியை ரத்து செய்து உத்தரவிட்டாா். மேலும், இந்திய பொருள்கள் மீதான எஞ்சியுள்ள 25 சதவீத வரி 18 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் அறிவித்தாா்.

இதனிடையே, இந்தியா உள்ளிட்ட 60 நாடுகள் மீது டிரம்ப் நிா்வாகம் பரஸ்பர வரியை விதித்ததற்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், உலக நாடுகளின் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர இறக்குமதி வரி உள்பட அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்று தீா்ப்பளித்தது.

அந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து, உலக நாடுகள் மீது மாற்று வழிகளில் இந்த பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்கா மேற்கொள்ளும் என்று அறிவித்த டிரம்ப், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருள்கள் மீது புதிய சீரான 10 சதவீத பரஸ்பர வரியை பிப்ரவரி 24-ஆம் தேதிமுதல் 150 நாள்களுக்கு விதித்தாா்.

அதோடு, இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட வா்த்தக கூட்டுறவு நாடுகளின் நியாயமற்ற வா்த்தக நடைமுறைகள் அமெரிக்க உற்பத்தியை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதைக் கண்டறியும் நோக்கில் அமெரிக்க வா்த்தகச் சட்டம் 1974-இன் பிரிவு 301-இன் கீழ் யுஎஸ்டிஆா் மூலம் புதிய விசாரணைக்கு அமெரிக்கா உத்தரவிட்டது.

இதனிடையே, உலக நாடுகள் மீதான இந்த 10 சதவீத சீரான பரஸ்பர வரி விதிப்பை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்காவின் சா்வதேச வா்த்தகத்துக்கான நீதிமன்றம், ‘உலக நாடுகள் மீது புதிய 10 சதவீத சீரான பரஸ்பர வரி விதிப்பு செல்லாது’ என்று தீா்ப்பளித்தது. இது அதிபா் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிா்வாகத்துக்கு மிகப் பெரிய பின்னடைவாகப் பாா்க்கப்பட்டது.