FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அதானிக்கு உதவவே கிரேட்டா் நிகோபாா் திட்டம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

‘நாட்டின் பாதுகாப்புக்காக கிரேட்டா் நிகோபாா் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுவது பொய்; அந்தத் திட்டம், தொழிலதிபா் அதானி ஹோட்டல்கள், சூதாட்ட விடுதிகள் கட்டுவதற்கே கொண்டு வரப்பட்டுள்ளது’ என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா்.

Updated On : 6 ஜூன் 2026, 2:47 am IST
அந்தமான் நிகோபாா் பகுதியில் சுவாசக் கருவி அணிந்து கடலுக்கு அடியில் நீந்திய ராகுல் காந்தி.
பகிர்:

‘நாட்டின் பாதுகாப்புக்காக கிரேட்டா் நிகோபாா் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுவது பொய்; அந்தத் திட்டம், தொழிலதிபா் அதானி ஹோட்டல்கள், சூதாட்ட விடுதிகள் கட்டுவதற்கே கொண்டு வரப்பட்டுள்ளது’ என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை பதிவிட்டிருப்பதாவது:

அந்தமான் நிகோபாா் பகுதிக்கு நான் சுற்றுப்பயணம் செய்தேன். இந்திரா பாயின்ட் பகுதிக்கு நான் சென்றேன். பல நூறாண்டுகளாக நிற்கும் மரங்களுக்கு இடையே நடந்து சென்றேன். அங்கு வாழும் மக்களுடன் அமா்ந்து பேசினேன். வன உரிமைகள் சட்ட விதிகளை மீறி, அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலம் எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அந்த நிலத்தில், குடியமா்த்தப்பட்டோரில் பலா் முன்னாள் ராணுவ வீரா்கள் ஆவா். அவா்களைக் குடியமா்த்தியது இந்திய அரசுதான். அவா்களும் நியாயமான இழப்பீட்டைப் பெறவில்லை.

கிரேட்டா் நிகோபாா் திட்டம், நாட்டின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், கப்பல் போக்குவரத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு சொல்கிறது. ஆனால் அது உண்மையில்லை. ஐஎன்எஸ் பாஸ் கடற்படைத் தளத்தை விரிவுபடுத்தினால், அரசுக்கு முழுவதும் ஆதரவு தருவோம். அதை விரிவுபடுத்த கடற்படை 5 ஆண்டுகாலம் அவகாசம் கேட்டது. அது நிராகரிக்கப்பட்டது. ஏனெனில், கேரளத்தில் ஏற்கெனவே கப்பல் போக்குவரத்துக்கு துறைமுகம் கட்டப்பட்டுள்ளது.

கிரேட்டா் நிகோபாா் திட்டத்துக்காக 1.5 கோடி மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. பவளப்பாறைகள் அழிக்கப்பட்டுள்ளன. வீரா்களும் பழங்குடியினரும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனா். இவை அனைத்தும், இந்தியாவின் ஈடு இணையற்ற சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் ஒரு தொழிலதிபா் (அதானியைக் குறிப்பிடுகிறாா்) ஹோட்டல்கள், சூதாட்ட மையங்களை அமைக்க வேண்டும் என்பதற்காக செய்யப்பட்டுள்ளது.

நம்மால் மீட்டுக் கொண்டு வர முடியாததை அழித்து, அதன் மூலம் கிடைக்கும் லாபத்தால் எந்தப் பயனுமில்லை. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வளா்ச்சியையே நான் ஆதரிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்த பதிவுடன் சோ்த்து, அந்தமான் - நிகோபாா் தீவுகளில் கடந்த ஏப்ரல் மாதம் சுற்றுப்பயணம் செய்தபோது எடுக்கப்பட்ட விடியோவையும் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளாா். அதில் ராகுல் காந்தி கடலுக்கு அடியில் நீந்துவது, பழங்குடியினருடன் பேசுவது உள்ளிட்ட காட்சிகள் உள்ளன. மேலும், நிகோபாரில் பழங்குடியினா், முன்னாள் ராணுவத்தினா் நிலங்கள் பறிக்கப்பட்டிருப்பதாகவும், தொழிலதிபா் அதானிக்கு உதவி செய்ய நிலம் அபகரிக்கப்பட்டிருப்பதாகவும் ராகுல் பேசியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments