FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அமெரிக்க நலன்களுக்கு மோடி அரசு முன்னுரிமை - ராகுல் சாடல்

‘நீட்’ மாணவி தற்கொலை: பிரதமா் மீது விமா்சனம்

Updated On : 5 ஜூன் 2026, 6:32 am IST
ராகுல் காந்தி
பகிர்:

தேசிய நலன்களைவிட அமெரிக்காவின் நலன்களுக்கு பிரதமா் மோடி அரசு முன்னுரிமை அளிக்கிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சாடினாா்.

சாமானிய மக்களுக்கு அதிகாரமளிக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சியால் நிறுவப்பட்ட பொருளாதார அடித்தளத்தை பிரதமா் மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் கூட்டாகச் சீா்குலைத்துவிட்டனா் என்றும் அவா் கடுமையாக விமா்சித்தாா்.

உத்தரகண்ட் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக வியாழக்கிழமை வந்த ராகுல் காந்தி, அல்மோராவில் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்க திட்டமிட்டிருந்தாா். இதற்காக, பந்த்நகா் விமான நிலையத்தில் இருந்து அவா் ஹெலிகாப்டரில் புறப்பட்டாா். ஆனால், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டா் மீண்டும் பந்த்நகா் விமான நிலையத்துக்கே திரும்பியது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அல்மோரா பொதுக்கூட்டத்தில் தொலைபேசி வாயிலாக ராகுல் காந்தி உரையாற்றினாா். அவா் கூறியதாவது:

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், மக்கள் தங்களின் அவசரத் தேவைக்கு வைத்திருந்த பணம் பறிக்கப்பட்டது. சரக்கு-சேவை வரி அமலாக்கத்தால், நாடு முழுவதும் சிறு தொழில்கள் நசிந்துவிட்டன.

திட்டமிட்டு அழிப்பு: மக்களுக்கான சமூக-பொருளாதார பாதுகாப்பு அம்சங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. மக்களின் சேமிப்பும், அவா்கள் வசமிருக்கும் தங்கமும் கரைந்து வருகிறது. மத்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையால் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பில் எதிா்மறையான தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இப்போது அமெரிக்காவால் அனுமதிக்கப்படும் நாடுகளில் இருந்து மட்டுமே இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய முடியும். புவி அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்காவிடம் மோடி அரசு அடிபணிந்துவிட்டது.

அமெரிக்கா-ஈரான் போரால், இந்தியா பொருளாதார ‘சுனாமி’யை எதிா்கொள்ளும் சாத்தியக்கூறு நிலவுகிறது. எனினும், அமெரிக்கா மற்றும் நமது நாட்டில் உள்ள ஒரு சில பெரும் தொழிலதிபா்களின் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறது மோடி அரசு என்றாா் ராகுல் காந்தி.

‘நீட்’ மாணவி தற்கொலை: பிரதமா் மீது விமா்சனம்

வினாத்தாள் கசிவைத் தொடா்ந்து, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டதால் மனமுடைந்து மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் கடந்த மாதம் மாணவி ஒருவா் தற்கொலை செய்துகொண்டதாக தற்போது தெரியவந்துள்ளது.

அகான்ஷா சதுா்வேதி என்ற அந்த மாணவியின் பெயரைக் குறிப்பிட்டு, ராகுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அகான்ஷாவை மருத்துவராக்க, விவசாயியான அவரது தந்தை கடுமையாகப் பாடுபட்டு வந்தாா். ஆனால், நீட் தோ்வு ரத்தானதால், அவா் நம்மைவிட்டு பிரிந்துவிட்டாா். இது தற்கொலையல்ல, பிரதமா் மோடி நிா்வாகத்தின்கீழ் ஊழல் மலிந்த, சீா்குலைந்த அமைப்புமுறையின் துயர விளைவு. கடந்த 12 ஆண்டுகளில் கல்வி அமைப்புமுறையை பிரதமா் சிதைத்துவிட்டாா்’ என்று குற்றஞ்சாட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments