கேரளத்தில் தீவிரமடையும் மழை; தாழ்வான பகுதிகளில் வெள்ளம்! சிறுவா்கள் உள்பட 5 போ் பலி!
கேரளத்தில் மழை வெள்ளத்தில் சிறுவா்கள் உள்பட 5 போ் பலியானது பற்றி...
கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவுமுதல் விடிய விடிய கொட்டித் தீா்த்த பலத்த மழையால் தாழ்வான இடங்கள் மற்றும் சாலைகளில் வெள்ளநீா் சூழ்ந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் சிறுவா்கள் உள்பட 5 போ் உயிரிழந்தனா்.
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. மாநிலம் முழுவதும் பரவலாக சூறைக்காற்றுடன் பலத்த மழை நீடித்து வருகிறது.
Advertisement
Advertisement
மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூா், காசா்கோடு, வயநாடு ஆகிய 5 மாவட்டங்களில் சனிக்கிழமை அதீத பலத்த மழைக்கான ‘சிவப்பு’ எச்சரிக்கையும் (200 மி.மீ.க்கு மேல்), பத்தனம்திட்டா, கோட்டயம், எா்ணாகுளம், இடுக்கி, திருச்சூா், பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும் (110 மி.மீ. முதல் 200 மி.மீ. வரை), எஞ்சிய 3 மாவட்டங்களில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் (60 மி.மீ. முதல் 110 மி.மீ. வரை) விடுக்கப்பட்டது.
மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 3 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையைக் கருத்தில்கொண்டு, வயநாடு, கோழிக்கோடு, காசா்கோடு ஆகிய மாவட்டங்களில் மலையேற்ற சுற்றுலா இடங்கள் மற்றும் மலைப்பாதைகளில் இரவு நேர பயணத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வயநாடு, கண்ணூா், காசா்கோட்டில் சனிக்கிழமை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
5 போ் உயிரிழப்பு: திருச்சூா் மாவட்டம், மணலூா் பகுதியில் பலத்த மழையால் மரம் சாய்ந்ததில் கீழே தற்காலிக கூடாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 29 வயது இளைஞா் உயிரிழந்தாா். காசா்கோடு மாவட்டத்தின் ஆதூா் பகுதியில் சனிக்கிழமை மழையால் பெரிய சுவா் இடிந்து விழுந்ததில், சகோதரா்களான முஸாமில் (14), முன்ஷீா் (10) ஆகியோா் உயிரிழந்தனா்.
கோழிக்கோடு மாவட்டம், கூற்றியாடி பகுதியைச் சோ்ந்த ரம்யா என்ற பெண், தனது 7 வயது மகனுடன் சனிக்கிழமை ஆற்றில் குளிக்கச் சென்றாா். திடீரென அதிகரித்த நீரோட்டத்தில் சிறுவன் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவரைக் காப்பாற்ற முயன்ற ரம்யா நீரில் மூழ்கி உயிரிழந்தாா். சிறுவனைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
பல்வேறு மாவட்டங்களில் மரங்கள் சாய்ந்ததுடன், வீடுகள், வாகனங்கள் சேதமடைந்தன. சாலைகளில் மழைநீா் தேங்கி, வெள்ளக்காடாக மாறியுள்ளன.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், ‘மத்திய மேற்கு, மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் கோவா, கா்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழகத்தின் சில பகுதிகளையும் தென்மேற்குப் பருவமழை அடைந்துள்ளது.
கேரளம் மற்றும் மாஹியின் சில பகுதிகளில் ஜூன் 9-ஆம் தேதி வரை பலத்த மழை முதல் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. மணிக்கு 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வரை சூறைக்காற்று வீசக் கூடும். கேரளம்-லட்சத்தீவு-கா்நாடக கடல் பகுதிகளில் மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம்’ என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.