குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்த்தால் அரசின் நலத்திட்டங்கள் கிடையாது: கிராம ஊராட்சிகள் அதிரடி
தெலங்கானாவில் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்த்தால் அரசின் நலத்திட்டங்களை இழக்க நேரிடும் என கிராம ஊராட்சிகள் தீர்மானம்
தெலங்கானாவில் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்த்தால் அரசின் நலத்திட்டங்களை இழக்க நேரிடும் என கிராம ஊராட்சிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
தெலங்கானாவில் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளதால், அரசுப் பள்ளிகளில் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகளில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதனிடையே, தெலங்கானாவின் சின்னபோயினபள்ளி மற்றும் முப்பரம் ஆகிய இரு கிராம ஊராட்சிகளில் உள்ள அரசு நலத்திட்டப் பயனாளிகள், தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளை விடுத்துத் தனியார் பள்ளிகளில் சேர்த்தால், அவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் அரிசி, சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களை இழக்க நேரிடும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
Advertisement
Advertisement
அதுமட்டுமின்றி, சின்னபோயினபள்ளி கிராமத்தில் மாணவர்களை அழைத்துச் செல்வதற்கும், வீடுகளில் விட்டுச் செல்வதற்கும் வரும் தனியார் பள்ளி வாகனங்கள் கிராமங்களில் நுழையக் கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளை வலுப்படுத்தவும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சின்னபோயினபள்ளி கிராம ஊராட்சித் தலைவர் கூறியதாவது, "கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை வலுப்படுத்தவே இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்போர் யாரும் இருந்தால், அவர்கள் அரசின் திட்டங்களால் ஏதேனும் பயனடைந்தால், அவற்றைச் சரிபார்த்து, அவர்களுக்கு ஓய்வூதியம், ரேசன் அட்டை மற்றும் பிற திட்டங்களை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பரிந்துரைப்போம்.
தனியார் பள்ளிகளில் படிக்க வசதி இருக்கும்போது, அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் எதற்கு?" என்று கேள்வி எழுப்பினார்.
இந்தத் தீர்மானங்களின் எதிரொலியாக, டிஎன்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 103 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Telangana Village panchayats pass resolutions stating that enrolling children in private schools would result in the loss of government welfare schemes
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.