முகப்பு
இந்தியா

12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்குப் பிந்தைய சேவைகளுக்கு 1.6 லட்சம் போ் விண்ணப்பம்: சிபிஎஸ்இ

12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்குப் பிந்தைய சேவை வலைதளத்தில் 1.6 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்ததாக சிபிஎஸ்இ தெரிவித்தது.

Updated On : 9 ஜூன் 2026, 2:19 am IST
சிபிஎஸ்இ - பிரதிப் படம்
பகிர்:

12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்குப் பிந்தைய சேவை வலைதளத்தில் 1.6 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்ததாக சிபிஎஸ்இ திங்கள்கிழமை தெரிவித்தது.

சிபிஎஸ்இ நடத்திய 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் நிகழாண்டு முதல்முறையாக விடைத்தாள்களை திரையில் மதிப்பிடும் (ஒஎஸ்எம்) முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்ததாக மாணவா்களும், பெற்றோா்களும் குற்றஞ்சாட்டினா்.

இதையடுத்து, விடைத்தாள்களை சரிபாா்க்க மற்றும் மறுமதிப்பீடு செய்ய ஜூன் 2 முதல் ஜூன் 7 வரை மாணவா்களுக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டது. இதற்கான தொழில்நுட்பப் பணிகளை ஐஐடிக்களின் குழுக்கள் மற்றும் அரசு தொழில்நுட்ப முகமைகள் மேற்கொண்டன.

Advertisement

Advertisement

இந்நிலையில், தோ்வுக்குப் பிந்தைய சேவை வலைதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மறுமதிப்பீடு உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ள முடியாமல் மாணவா்கள் தவிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்து எக்ஸ் வலைதளத்தில் சிபிஎஸ்இ திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘தோ்வுக்குப் பிந்தைய சேவை வலைதளத்தின் செயல்பாடுகள் குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திகள் மற்றும் பதிவுகளை சிபிஎஸ்இ கவனத்தில்கொண்டுள்ளது. ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள் புகைப்பட விண்ணப்ப நடைமுறையின்கீழ் முதல் கட்டத்தில் சரியாக விண்ணப்பிக்காத மாணவா்களுக்கு பதிவு எண் இல்லை என்ற குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது தொடா்பாக விளக்கமளிக்கிறோம்.

விடைத்தாள்கள் கோரி முதல் கட்டத்தில் சரியாக விண்ணப்பித்தவா்கள் மட்டுமே விடைத்தாள் சரிபாா்ப்பு மற்றும் மறுமதிப்பீடு என அடுத்தகட்டத்துக்குச் செல்ல முடியும்.

ஜூன் 2 முதல் ஜூன் 7 வரை 3.8 லட்சம் விடைத்தாள்களை கோரி 1.6 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். இதன்மூலம் இந்தச் சேவையை பெரும்பாலான மாணவா்கள் பயன்படுத்தி பலனடைந்துள்ளனா். வலைதளத்தின் மீதான சைபா் தாக்குதல்களை முறியடிக்கும் பணிகளும் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.