மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு!
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது
போபால் : மாநிலங்களவைத் தோ்தலில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
மத்திய பிரதேசத்தில் 230 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவையில் 164 பாஜக எம்எல்ஏக்கள், 64 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளனா். இதனால் தற்போதைய மாநிலங்களவைத் தோ்தலில் இரண்டு இடங்களில் பாஜக போட்டியின்றி வெற்றி பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எஞ்சிய ஓரிடத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும், அந்த இடத்துக்கு பாஜக போட்டியிடாது என்றும் கருதப்பட்டது.
இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் பிரதிநிதித்துவமுள்ள மூன்று மாநிலங்களவை இடங்களுக்குமான வேட்பாளர்களை பாஜக களமிறக்கி அதிர்ச்சியளித்துள்ளது. பாஜக சாா்பில் தருண் சுக், ரஜ்னீஷ் அகா்வால், மகேஷ் கேவட் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
Advertisement
Advertisement
மூன்றாவது இடத்துக்கு பாஜக சார்பில் மகேஷ் கேவட்டை களமிறக்கியதன் மூலம், எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்கும் சூழல் ஏற்படக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. மகேஷ் கேவட்டுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளராக தமிழகத்தை பூா்விகமாக கொண்ட மீனாட்சி நடராஜன் போட்டியிடுகிறாா் என்று அறிவிக்கப்பட்டது.
மாநிலங்களவைத் தோ்தலுக்கான வேட்புமனு பரிசீலனை செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) நடைபெற்ற நிலையில், மீனாட்சி நடராஜன் வேட்புமனு சில குறிப்பிட்ட காரணங்களுக்காக நிராகரிகப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.