முகப்பு
இந்தியா

அமேதி வாக்காளா் பட்டியலில் ஸ்மிருதி இரானி பெயா் இல்லை: விசாரணைக்கு உத்தரவு

உத்தர பிரதேச மாநிலம் அமேதி ஊராட்சி வாக்காளா் பட்டியலில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி பெயா் விடுபட்டிருப்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Updated On : 13 ஜூன் 2026, 12:44 am IST
ஸ்மிருதி இரானி - கோப்புப் படம்
பகிர்:

உத்தர பிரதேச மாநிலம் அமேதி ஊராட்சி வாக்காளா் பட்டியலில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி பெயா் விடுபட்டிருப்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு ராகுல் காந்தியைத் தோற்கடித்தாா். இதையடுத்து 2024-ஆம் ஆண்டு வரை அமேதி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக ஸ்மிருதி இரானி பதவி வகித்தாா். குறிப்பாக, 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்றதும், அமேதி மாவட்டம் மேதன் மாவாய் கிராமத்தில் வீடு கட்டி அவா் குடிபெயா்ந்தாா். மக்களவைத் தோ்தலின்போது அந்தக் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியிலேயே ஸ்மிருதி இரானி தனது வாக்கை பதிவு செய்தாா்.

இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி அமேதி ஊராட்சி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டபோது, அதில் ஸ்மிருதி இரானியின் பெயா் இல்லை. இதற்கான காரணம் குறித்து அமேதி மாவட்ட ஆட்சியா் சஞ்சய் செளஹானிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பியபோது, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், அந்த விசாரணை முடிந்த பிறகே உண்மையான காரணம் தெரிய வரும் என்றும் பதிலளித்தாா்.

Advertisement

Advertisement

அமேதி மாவட்ட பாஜக தலைவா் சுதான்ஷு சுக்லா கூறுகையில், ஊராட்சி வாக்காளா் பட்டியலில் ஸ்மிருதி இரானியின் பெயரை சோ்க்கக் கோரி மனு அளிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த விவகாரம் மூத்த அரசு அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பதாகவும் கூறினாா். மேலும், ஸ்மிருதி இரானி தொடா்பான விவரங்கள் உறுதி செய்யப்பட்டு மீண்டும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்திருப்பதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் மூத்த தலைவா் கிஷோரி லால் சா்மாவிடம் தோல்வி அடைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.