முகப்பு
இந்தியா

புதிய முகங்களுக்கு வாய்ப்பு: தில்லி பாஜகவில் வரவிருக்கும் மாற்றங்கள்!

தில்லி பாஜகவில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது பற்றி..

Updated On : 15 ஜூன் 2026, 5:55 pm IST
பாஜக - TNIE
பகிர்:

தில்லி பாஜகவில் பெரிய அளவில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

தில்லியில் கடந்த 2025ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், மொத்தமுள்ள 70 இடங்களில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது. தற்போது பாஜகவின் ரேகா குப்தா தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், தில்லி பாஜகவில் பெரிய அளவிலான அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், முக்கியமாக தற்போதைய நிர்வாகிகளில் சுமார் 70 முதல் 80 சதவீதம் பேர் மாற்றப்பட்டு, அவர்களுக்குப் பதிலாகப் புதிய முகங்களும் இளம் தலைவர்களும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

புதிய தில்லி பாஜக தலைவரான ஹர்ஷ் மல்ஹோத்ரா தலைமையில், மாவட்ட அளவிலான பிரிவுகளை மறுசீரமைக்கும் பணிகளில் கட்சி ஏற்கெனவே தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வரும் ஜூலை மாதத்திற்குள் மாநிலக் கட்சி அமைப்பு முழுமையாக மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தில்லி பாஜகவின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.

கட்சியில் அதிகம் செயல்பாட்டுத் திறன் கொண்ட புதிய தலைவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். பல்வேறு பதவிகளை வகிக்க அதிக அளவிலான இளம் தலைவர்களுக்குக் குறிப்பாக 45 வயதுக்குள்பட்டவர்களுக்கு வாய்ப்பளிப்பதை உறுதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள தில்லி மாநகராட்சி தேர்தலுக்கு முன்னதாகவே, புதிய குழு பொறுப்பேற்றுச் செயல்படும். இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையின் விளைவாக தற்போதைய நிர்வாகிகளில் சுமார் 70 முதல் 80 சதவீதம் பேர் வெளியேற நேரிடலாம் என மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகிக்கும் மல்ஹோத்ரா கடந்த மாதம் தில்லி பாஜக தலைவராகப் பொறுப்பேற்றார்.

பிப்ரவரி 2025-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களில் தற்போதைய நிர்வாகிகளில் பலர் எம்எல்ஏக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவர்களைப் பெருமளவில் மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். பாஜகவின் மாநில அமைப்பில் தலைவர், பொதுச் செயலாளர் (அமைப்பு) தவிர, எட்டுத் துணைத் தலைவர்கள், மூன்று பொதுச் செயலாளர்கள், ஒரு பொருளாளர் மற்றும் ஒன்பது செயலாளர்கள் ஆகியோர் உள்ளனர்.

கட்சியின் பல்வேறு துணை அமைப்புகளும் இந்த அமைப்பு ரீதியான மாற்றங்களின்போது சீரமைக்கப்படும். பேரவைத் தேர்தலின்போது திறமை, அமைப்பு ரீதியான மற்றும் பிரசாரத் திறன்களை வெளிப்படுத்திய அனுபவம் வாய்ந்த தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்கும் கட்சி முன்னுரிமை அளிக்கும்.

ஆம் ஆத்மி கட்சியிடம் தனது ஆதிக்கத்தை இழந்த தில்லி மாநகராட்சித் தேர்தலையும் பாஜக கூர்ந்து கவனித்து வருகிறது. இருப்பினும், ஆம் ஆத்மி கட்சியின் பல கவுன்சிலர்கள் கட்சி மாறியதன் மூலம் பாஜக மீண்டும் அந்த உள்ளாட்சி அமைப்பின் கட்டுப்பாட்டைப் பெற்றது. இதன் அடிப்படையில், பாஜக தனது தற்போதைய கவுன்சிலர்கள் சிலரையும் புதிய தில்லி நிர்வாகக் குழுவில் சேர்க்கக்கூடும் என அவர்கள் தெரிவித்தனர்.

மாவட்ட அலகுகளில் உள்ள அமைப்பு ரீதியான இடைவெளிகளை நிரப்புவதும், மாநில அலகை மறுசீரமைப்பதும் தனது முன்னுரிமைகளாக இருக்கும் என்று மல்ஹோத்ரா முன்னதாகக் கூறியிருந்தார்.

அமைப்பு ரீதியான விவகாரங்களில் மல்ஹோத்ரா கொண்டுள்ள ஆழ்ந்த அறிவையும் அனுபவத்தையும் கருத்தில் கொண்டு, கட்சியின் புதிய குழுவில் கள அளவில் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்த தலைவர்கள் இடம்பெறக்கூடும் என்று கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையானது, திறமையான இளம் தலைவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பொறுப்பான பதவிகளை வழங்குவதன் மூலம் எதிர்காலத் தலைமையை உருவாக்கும் பாஜகவின் வியூகத்தின் ஒரு பகுதியாகும்.

மேலும், முக்கியப் பொறுப்புகளிலிருந்தும் எதிர்பார்த்தபடி செயல்படத் தவறியவர்களை நீக்குவதற்கும் தலைமைக்கு வாய்ப்பளிப்பதாக இருக்கும் என அவர்கள் கூறினர்.

A major organisational overhaul of the Delhi BJP is planned with around 70-80 per cent of the current office bearers likely to be replaced by new faces and younger leaders, party leaders said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.