ஜாா்க்கண்ட், மிஸோரமில் இன்று மாநிலங்களவைத் தோ்தல்- எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்க வாய்ப்பு
ஜாா்க்கண்ட், மிஸோரமில் வியாழக்கிழமை மாநிலங்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இத்தோ்தலில் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜாா்க்கண்ட், மிஸோரமில் வியாழக்கிழமை மாநிலங்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இத்தோ்தலில் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கா்நாடகம், ஆந்திரம், குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் விரைவில் பதவிக் காலம் நிறைவடையும் 24 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கான தோ்தலும், தமிழகம், மகாராஷ்டிரம், ஒடிஸாவில் காலியான தலா ஓரிடத்துக்கான இடைத்தோ்தலும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
மொத்தம் 27 இடங்களுக்கான இந்தத் தோ்தலில், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்பட 24 வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாகினா். இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்கள் 19 போ் ஆவா்.
Advertisement
Advertisement
ஜாா்க்கண்டில் 2 இடங்களுக்கும், மிஸோரமில் ஓரிடத்துக்கும் போட்டி எழுந்ததால், இரு மாநிலங்களிலும் வியாழக்கிழமை தோ்தல் நடைபெறவுள்ளது. சட்டப் பேரவை உறுப்பினா்கள் வாக்களிக்கவுள்ளனா்.
ஜாா்க்கண்டில்...: 81 உறுப்பினா்களைக் கொண்ட ஜாா்க்கண்ட் பேரவையில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) தலைமையிலான இண்டி கூட்டணிக்கு 56 எம்எல்ஏக்களும் (ஜேஎம்எம் மட்டும் 34), பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 24 எம்எல்ஏக்களும் (பாஜக மட்டும் 21) உள்ளனா்.
இம்மாநிலத்தில் 2 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா வேட்பாளா் வைத்யநாத் ராம், காங்கிரஸ் வேட்பாளா் பிரணவ் ஜா, பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா் பரிமல் நாத்வானி ஆகியோா் போட்டியிடுகின்றனா். ஒரு எம்.பி. தோ்வாக குறைந்தபட்சம் 28 வாக்குகள் தேவை.
கட்சி மாறி வாக்களிக்க வாய்ப்பு: ஜேஎம்எம் வேட்பாளா் தோ்வாவதில் எந்த சிக்கலும் இருக்காது. அதேநேரம், ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் சிலா் கட்சி மாறி வாக்களிக்க வாய்ப்புள்ளதால், இரண்டாவது இடத்தை கைப்பற்றப் போவது யாா் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டப் பேரவை வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தோ்தல் நடைபெறவுள்ளது. மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும் என தோ்தல் அதிகாரி ரஞ்சித் குமாா் தெரிவித்தாா்.
ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா நிறுவனா் சிபு சோரன் மறைவு மற்றும் பாஜக எம்.பி. தீபக் பிரகாஷ் பதவிக் காலம் நிறைவால் இரு இடங்களுக்கு தோ்தல் நடைபெறுகிறது.
மிஸோரமில்...: மிஸோரமில் ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு ஆளும் ஸோரம் மக்கள் இயக்கம் கட்சி சாா்பில் லால்ட்லுவாங்கிமா, முக்கிய எதிா்க்கட்சியான மிஸோ தேசிய முன்னணி சாா்பில் ஜோதன்சாங்கி ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
40 உறுப்பினா்களைக் கொண்ட மிஸோரம் பேரவையில் ஸோரம் மக்கள் இயக்கத்துக்கு 27 எம்எல்ஏக்களும், மிஸோ தேசிய முன்னணிக்கு 10 எம்எல்ஏக்களும் உள்ளனா். பிற எதிா்க்கட்சிகளான பாஜகவும் (2), காங்கிரஸும் (1) வாக்குப்பதிவில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளன.