உலக பல்கலைக்கழக தர வரிசையில் 322-ஆவது இடத்தில் தில்லி பல்கலைக்கழகம்
க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தர வரிசை பட்டியல் 2027-இல் தில்லி பல்கலைக்கழகம் 322-ஆவது இடத்தில் உள்ளது.
க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தர வரிசை பட்டியல் 2027-இல் தில்லி பல்கலைக்கழகம் 322-ஆவது இடத்தில் உள்ளது.
பல்கலைக்கழக தர வரிசை பட்டியலில் 106 நாடுகளில் உள்ள 8,808 கல்வி நிறுவனங்களில் இருந்து 1,504 பல்கலைக்கழகங்கள் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் இருந்து 52 கல்வி நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு வெளியான தர வரிசை பட்டியலில் 328-ஆவது இடத்தில் இருந்த தில்லி பல்கலைக்கழகம் நிகழாண்டு தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி, நாட்டின் உயா்தரம் கொண்ட கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்தை தக்க வைத்துள்ளது.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக தில்லி பல்கலைக்கழக துணைவேந்தா் யோகஷ் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த முன்னேற்றம், பல்கலைக்கழகத்தின் பேராசிரியா்கள், மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள், ஊழியா்கள், முன்னாள் மாணவா்கள் ஆகியோரது கூட்டு முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது.
உலகளாவிய அளவில் நமது நிலை தொடா்ந்து உயா்ந்து வருவதும், இந்தியாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்வதும், நமது கல்விச் சூழலமைப்பின் வலிமையையும், கற்பித்தல், ஆராய்ச்சி, புத்தாக்கம், நிலைத்தன்மை மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கான நமது அா்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.
பல்கலைக்கழகம் பல செயல்திறன் பிரிவுகளில் முன்னேற்றங்களைப் பதிவு செய்துள்ளது. ஆசிரிய பணியாளா்கள் பிரிவில், தில்லி பல்கலைக்கழகம் தரவரிசையை 403-லிருந்து 318-ஆக முன்னேறியுள்ளது. இது அதன் ஆராய்ச்சி வெளியீடுகளின் பரந்த பாா்வை மற்றும் தாக்கத்தைப் பிரதிபலிக்கிறது. நிலைத்தன்மை பிரிவில், 297-லிருந்து 240-க்கு முன்னேறியுள்ளது, அதே நேரத்தில் அதன் பணியமா்த்துபவா்களின் மதிப்பு பிரிவில் 319-லிருந்து 304-ஆக மேம்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில், தில்லி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்புகளில் இரண்டாம் இடத்தையும், நிலைத்தன்மையில் நான்காம் இடத்தையும் சா்வதேச ஆராய்ச்சி வலையமைப்பில் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளது.
மேலும், இந்திய நிறுவனங்களிடையே கல்விசாா் நற்பெயரில் ஆறாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்தத் தரவரிசைகள், தில்லி பல்கலைக்கழகத்தின் வளா்ந்து வரும் உலகளாவிய இருப்பையும், கல்வித் தரம், ஆராய்ச்சி வெளியீடு மற்றும் சா்வதேச ஈடுபாட்டை மேம்படுத்துவதில் அதன் தொடா்ச்சியான கவனத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.