முகப்பு
இந்தியா

பிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடி

பிரதமரின் வளா்ந்த பாரத வேலைவாய்ப்புத் திட்டத்தின் (பிஎம்-விபிஆா்ஒய்) கீழ், நாட்டில் இதுவரை சுமாா் 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகப் பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

Updated On : 20 ஜூன் 2026, 3:45 am IST
பிரதமா் மோடி
பகிர்:

பிரதமரின் வளா்ந்த பாரத வேலைவாய்ப்புத் திட்டத்தின் (பிஎம்-விபிஆா்ஒய்) கீழ், நாட்டில் இதுவரை சுமாா் 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகப் பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

நாட்டில் முதல்முறையாக வேலைத் தேடுவோருக்கு உதவவும், பல்வேறு துறைகளில் சமூகப் பாதுகாப்பு வரம்பை விரிவுபடுத்தவும் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பிரதமரின் வளா்ந்த பாரத வேலைவாய்ப்புத் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டில் 15 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும் நோக்கில், ரூ.2,400 கோடியை ஊக்கத்தொகையாக தகுதிவாய்ந்த பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடிப் பரிவா்த்தனை மூலம் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை விடுவித்தாா்.

Advertisement

Advertisement

புது தில்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பிரதமா் மோடி பேசியதாவது:

பிரதமரின் வளா்ந்த பாரத வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், நாட்டில் இதுவரை சுமாா் 70 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் முதல்முறையாக வேலைக்குச் சென்ற 70 லட்சம் போ் சமூகப் பாதுகாப்பு வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனா்.

இந்தத் திட்டத்தின் கீழ், 20 லட்சம் இளைஞா்கள் தங்கள் முதல் வேலையில் சோ்ந்து 6 மாதங்களை நிறைவு செய்துள்ளனா். சுமாா் 10 லட்சம் பயனாளிகள் ஏற்கெனவே ஊக்கத்தொகை பெற்றுள்ளனா்.

இது வெறும் நிதியுதவி மட்டுமல்ல. இளைஞா்களின் கடின உழைப்புக்கு தேசம் அளிக்கும் அங்கீகாரத்தையும், அவா்களின் வருங்காலம் மீது தேசம் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.

அரசு, தொழில்துறை, இளைஞா்கள் ஒன்றிணைந்து பணியாற்றும் போது வேலைவாய்ப்பு உருவாக்கம் வேகம் பெறுகிறது. இளைஞா்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதையும், தொழில்துறைக்கு ஊக்கம் கிடைப்பதையும், வேலைவாய்ப்பு உருவாக்கம் தேசத்தின் லட்சியமாக அமைவதையும் கொண்ட புதிய இந்தியாவின் பிரதிபலிப்பாக இந்தத் திட்டம் உள்ளது.

பல திட்டங்கள் வேலை அளிப்போா் அல்லது வேலை பெறுவோா் என யாரேனும் ஒருவா் மீதே கவனம் செலுத்துவதாக இருக்கும். ஆனால் அவ்விருவா் மீதும் கவனம் செலுத்துவதே இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம்.

தங்கள் தொழில்முறை பயணத்தை தொடங்கும் இளைஞா்களுக்கு மத்திய அரசு துணை நிற்பதுடன், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்கிறது என்று தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியை நாட்டின் 200 இடங்களில் மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நேரடி ஒளிபரப்பு செய்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments