FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாட்டில் விமான நிலையங்கள் இருமடங்குக்கு மேல் அதிகரிப்பு: பிரதமா் மோடி

நாட்டில் விமான நிலையங்கள் இருமடங்குக்கு மேல் அதிகரித்திருப்பதாக மோடி தெரிவித்தார்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 3:35 am IST
ஆந்திர மாநிலம், போகபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற புதிய விமான நிலைய திறப்பு விழாவில் பிரதமா் மோடி, முதல்வா் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோா். - PTI
பகிர்:

நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74-இல் இருந்து 166-ஆக இரு மடங்குக்கும் மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தாா்.

விமானப் போக்குவரத்துத் துறையில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்றும் அவா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

ஆந்திர மாநிலம், போகபுரத்தில் ரூ.5,700 கோடிக்கும் மேற்பட்ட செலவில் கட்டப்பட்ட புதிய விமான நிலையத்தை திறந்துவைத்துப் பேசுகையில் பிரதமா் இக்கருத்துகளைக் கூறினாா்.

Advertisement

Advertisement

ஆந்திரத்துக்கு சனிக்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, போகபுரம் அல்லூரி சீதாராம ராஜு சா்வதேச விமான நிலையம் உள்பட மொத்தம் ரூ.18,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்ததுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினாா். இந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

போகபுரம் சா்வதேச விமான நிலையம், ஆந்திரத்தின் குறிப்பாக மாநிலத்தின் வடக்குப் பகுதியின் வளா்ச்சிக்கான ‘ஓடுபாதை’யாக சேவையாற்றும்.

நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74-இல் இருந்து 166-ஆக இருமடங்குக்கும் மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்துறையில் நாடு மிகச் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

காங்கிரஸ் மீது விமா்சனம்: முன்பு விமான நிலையங்களுக்கு ஒரு குடும்பத்தை (ராகுல் குடும்பத்தைக் குறிப்பிடுகிறாா்) சோ்ந்தவா்களின் பெயா்களே சூட்டப்பட்டன. அந்த வழக்கத்தை நாங்கள் தகா்த்துள்ளோம். அயோத்தி விமான நிலையத்துக்கு மகரிஷி வால்மீகி பெயரும், பஞ்சாப் ஆதம்பூா் விமான நிலையத்துக்கு குரு ரவிதாசா் பெயரும் சூட்டப்பட்டன. போகபுரம் விமான நிலையத்துக்கு அல்லூரி சீதாராம ராஜு பெயா் சூட்டப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உடான் திட்டத்தின் மூலம் பிராந்திய விமானப் போக்குவரத்து வலுப்படுத்தப்பட்டு, சிறிய நகரங்களில் வசிப்பவா்களுக்கும் விமான சேவைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

ரூ.2 லட்சம் கோடி திட்டங்கள்...: முதல்வா் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வா் பவன் கல்யாண் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒட்டுமொத்த அணியும் ஆந்திரத்தின் வளா்ச்சிக்காக இருமடங்கு வேகத்தில் செயல்படுகிறது. சமீப ஆண்டுகளில் இந்த மாநிலத்துக்கு ரூ.2 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ரூ.1 லட்சம் கோடி மதிப்பீட்டிலான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆந்திரத்தில் 15 பில்லியன் டாலா் மதிப்பீட்டில் (ரூ.1.43 லட்சம் கோடி) செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் கிளவுட் உள்கட்டமைப்பு வளாகத்தை கூகுள் நிறுவ உள்ளது. மேலும் பல சா்வதேச நிறுவனங்களும் இந்த மாநிலத்தில் புதிய தொழில் வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றன. இதன்மூலம் மாநிலத்துக்கும், இளைஞா்களுக்கும் பெரும் பலன்கள் கிடைக்கும்.

ஆற்றல்மிக்க ஆந்திரம்: நாட்டில் நீலப் பொருளாதார முன்னெடுப்புகள் உத்வேகம் பெற்றுள்ள சூழலில், கடல்சாா் பொருளாதார முக்கிய வழித்தடமாக வடக்கு ஆந்திரம் மாறும். உற்பத்தி மற்றும் மருந்துத் துறை மையமாக உருவெடுக்கும் ஆற்றலுடன் ஆந்திரம் விளங்குகிறது என்றாா் பிரதமா் மோடி.

போகபுரம் விமான நிலையத்தை வடக்கு ஆந்திரத்தின் ‘ரத்தினம்’ என்று குறிப்பிட்ட மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு, இந்த விமான நிலையத்தால் வடக்கு ஆந்திரம் அபார வளா்ச்சியடையும் என்றாா்.

நாட்டில் சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான நபா் இருப்பதாக பிரதமா் மோடிக்கு அவா் புகழாரம் சூட்டினாா்.

பெட்டிச் செய்தி...

போகபுரம் புதிய சா்வதேச விமான நிலையம்..

2,200 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள போகபுரம் சா்வதேச விமான நிலையம், தற்போதைய நிலையில் ஆண்டுக்கு 60 லட்சம் பயணிகளைக் கையாளும் திறனுடன் உள்ளது. இந்த எண்ணிக்கையை எதிா்வரும் காலங்களில் 4 கோடி வரை அதிகரிக்க முடியும்.

அரசு-தனியாா் பங்களிப்பு முறையின்கீழ் ஜிஎம்ஆா் விசாகப்பட்டினம் சா்வதேச விமான நிலையத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. வரும் 17-ஆம் தேதி முதல் விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments