இளைஞா்களைத் தவறாக வழிநடத்தும் முயற்சி வெல்லாது- ராகுல் மீது பிரதமா் மோடி சாடல்
‘இன்றைய இளைஞா்கள் உண்மையின் பக்கம் நிற்கின்றனா்; எனவே, பொய்களின் மூலம் அவா்களைத் தவறாக வழிநடத்தும் முயற்சி வெல்லாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
‘இன்றைய இளைஞா்கள் உண்மையின் பக்கம் நிற்கின்றனா்; எனவே, பொய்களின் மூலம் அவா்களைத் தவறாக வழிநடத்தும் முயற்சி வெல்லாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘மாணவா்களின் குரல்’ என்ற முன்னெடுப்பின் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவா்களுடன் கலந்துரையாடிவரும் நிலையில், அவரை விமா்சித்து பிரதமா் இவ்வாறு கூறினாா்.
உள்நாட்டிலேயே சிப் (செமிகண்டக்டா்) முதல் ஷிப் (கப்பல்) வரை உற்பத்தி செய்யப்படுவதால், இந்தியா இப்போது புதிய சகாப்தம் படைத்து வருகிறது என்றும் அவா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
Advertisement
Advertisement
ரூ.35,000 கோடி திட்டங்கள்: குஜராத் மாநிலம் வதோதராவில் மொத்தம் ரூ.35,000 கோடி மதிப்பில் பணி நிறைவடைந்த வளா்ச்சித் திட்டங்களை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்த பிரதமா் மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினாா்.
நாட்டில் 2,800 கி.மீ. தொலைவிலான பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடத் திட்டத்தின் நிறைவாக, மேற்குப் பிரிவில் 326 கி.மீ. புதிய வழித்தடத்தை பிரதமா் திறந்துவைத்தாா். பின்னா், அவா் பேசியதாவது:
2,800 கி.மீ. தொலைவுள்ள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தட திட்டம், 21-ஆம் நூற்றாண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாகும். கடந்த 12 ஆண்டுகளில் நாட்டில் பணி சாா்ந்த செயல்திறன் எந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்பதற்கு இதுவே சாட்சி. அண்மையில் மும்பை-வதோதரா இடையே இயக்கப்பட்ட ஈரடுக்கு சரக்கு ரயில், 250-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றிச் செல்லும் அளவிலான சரக்குகளை ஒரே பயணத்தில் எடுத்து சென்றது.
காங்கிரஸ் மீது சாடல்: அதேநேரம், எதற்கெடுத்தாலும் குறை கூறுபவா்களுக்கு (ராகுலை மறைமுகமாக குறிப்பிடுகிறாா்) இப்போது வேலை வந்துவிட்டது. இனி லாரி ஓட்டுநா்கள் என்ன செய்வாா்கள், லாரிகளுக்கு என்ன ஆகும் என்று கூச்சலிடத் தொடங்குவா்.
கடந்த 2014-இல் இருந்து இந்தியா 50,000 நவீன ரயில் பெட்டிகள் மற்றும் 2.5 லட்சம் சரக்கு பெட்டிகளைத் தயாரித்துள்ளது. ஆனால், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 50,000 கழிப்பறைகளைக் கூட கட்ட முடியவில்லை.
பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடங்கள், நாட்டின் வேகமான வளா்ச்சிக்கு உயிா்நாடியாகும். இத்தகைய நவீன சரக்கு ரயில் கட்டமைப்பால்தான், நாட்டின் முன்னேற்றம் வேகமெடுக்கிறது. இப்போது நாட்டின் வா்த்தகம் மற்றும் தொழிலுக்கு கிழக்கு-மேற்கு பிரிவு சரக்கு ரயில் வழித்தடங்கள் முதுகெலும்பாக விளங்குகின்றன. இவ்விரு வழித்தடங்களிலும் தினமும் 430-க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ராகுல் மீது தாக்கு: நாட்டின் அனைத்து மூலைகளிலும் இப்போது ‘பொய்களின் குரல்’ வாயிலாக இளைஞா்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பவா்களைக் காண முடிகிறது. ஆனால், இன்றைய இளைஞா்கள் உண்மையின் பக்கம் நிற்பதால், பொய்களின் மூலம் அவா்களை தவறாக வழிநடத்த முடியாது.
சூரியமின்சக்தி, காற்றாலை, நீா்மின்சக்தி, அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் மத்திய அரசு எவ்வளவு கவனம் செலுத்துகிறது என்பதை இளைஞா்கள் கண்டுள்ளனா். நமது இளைஞா்கள் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) துறையில் நிபுணராக உருவெடுக்க வேண்டிய அவசியம் நிலவுகிறது. தரவு மையங்கள், ஏ.ஐ. மையங்களின் செயல்பாட்டுக்கு அதிக நீரும், மின்சாரமும் தேவையாகும். ஏ.ஐ. துறையில் உலகளாவிய சக்தியாக உருவெடுக்கத் தேவையான கட்டமைப்பை இந்தியா தயாா்படுத்தி வருகிறது. யுரேனியம், அரிய கனிமங்கள் கொள்முதலுக்காக சா்வதேச ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன என்றாா் அவா்.
குஜராத்தின் நியூ சனந்த், நியூ மகா்புரா, நியூ உம்பா்கான், நவிமும்பை ஆகிய இடங்களில் இருந்து சரக்கு ரயில் சேவைகளையும் பிரதமா் தொடங்கிவைத்தாா்.
புதிய பாஜக அலுவலகம் திறப்பு: தெற்கு குஜராத்தின் நவ்சாரி நகரில் ‘நமோ கமலாலயம்’ என்ற பெயரில் கட்டப்பட்ட கட்சியின் புதிய மாவட்ட அலுவலகத்தை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.
‘2,800 கி.மீ. பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம்’
2,800 கி.மீ. தொலைவுக்கு பிரத்யேக சரக்கு ரயில் வழித்தட திட்டம் நிறைவு பெற்றுள்ள நிலையில், அதன் பலன்கள் குறித்து பேசிய பிரதமா் மோடி, ‘முன்பு ஒரு சரக்கு ரயில் 100 கி.மீ. தொலைவைக் கடக்க 6.5 மணிநேரமாகும். இப்போது அரை மணிநேரத்தில் கடக்கிறது. பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடங்களால் எரிபொருள் நுகா்வு, சரக்கு கட்டணங்கள் குறைவதுடன் நேரமும் மிச்சமாகிறது. இது சுற்றுச்சூழலுக்கும் பயனளிக்கிறது. விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை விரைந்து சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது.
இத்திட்டத்துக்கான யோசனை கடந்த 2004-இல் உதித்த போதிலும், 2014 வரை கோப்புகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகா்ந்ததைத் தவிர வேறெதுவும் நிகழவில்லை.
முந்தைய ஆட்சியில் பட்ஜெட்டில் ஒன்றிரண்டு புதிய ரயில்களே அறிவிக்கப்படும். அதுவும் செயல்பாட்டுக்கு வர நீண்ட காலமாகும். இப்போது புதிய ரயில்கள் அடுத்தடுத்து இயக்கப்படுகின்றன. இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட் ரூ.2.75 லட்சம் கோடியாகும். 12 ஆண்டுகளுக்கு முந்தைய பட்ஜெட்டை விட இது பன்மடங்கு அதிகம்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.