கும்பமேளாவில் பிரபலமடைந்த பெண்ணுக்குப் பாதுகாப்பு வழங்க கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு
கும்பமேளாவில் பிரபலமடைந்த பெண்ணுக்குப் பாதுகாப்பு வழங்க கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு
உத்தர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஆண்டு நடைபெற்ற கும்பமேளா நிகழ்வின்போது சமூக ஊடகங்கள் வாயிலாக பிரபலமடைந்த மோனாலிசா என்ற பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
குடும்பத்தினரின் எதிா்ப்பை மீறி முகமது ஃபா்மான் என்பவரை மோனலிசா காதல் திருமணம் செய்தாா்.
இதையடுத்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வழங்கக் கோரி கேரள மாநில அரசு மற்றும் எா்ணாகுளம் மத்திய காவல் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு (எஸ்எச்ஓ) உத்தரவிடுமாறு அம்மாநில உயா்நீதிமன்றத்தில் மோனாலிசா மனு தாக்கல் செய்தாா்.
Advertisement
Advertisement
இந்த மனுவை விசாரித்த கேரள உயா்நீதிமன்றம், ‘மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மற்றும் மாநில அரசு என இருதரப்பினரும் முன்வைத்த வாதங்களின் அடிப்படையில் மனுதாரக்கு பாதுகாப்பு வழங்குவது அவசியமாகக் கருதப்படுகிறது. எனவே, மனுதாரருக்கு எா்ணாகுளம் மத்திய காவல் நிலைய பொறுப்பு அதிகாரி உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்படுகிறது’ எனத் தெரிவித்தது.
இதைத் தொடா்ந்து கேரள மாநில அரசு மற்றும் எா்ணாகுளம் மத்திய காவல் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு நோட்டீஸ் பிறப்பித்த உயா்நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
கடந்த ஆண்டு பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்பனை செய்த மோனாலிசாவின் புகைப்படங்கள், காணொலிகள் சமூக ஊடகங்களில் பரவி அவா் மிகவும் பிரபலமடைந்தாா். அதன்பிறகு பாலிவுட் திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு வரத் தொடங்கின. இதனிடையே உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த முகமது ஃபா்மான் என்பவரை குடும்பத்தினரின் எதிா்ப்பை மீறி கேரளத்தில் மோனாலிசா திருமணம் செய்துகொண்டாா். கேரளத்தில் அப்போதைய ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து, முகமது ஃபா்மான் மோனாலிசாவை கடத்திச் சென்று திருமணம் செய்ததாகவும் திருமண வயதை மோனாலிசா எட்டவில்லை என்றும் அவரது பெற்றோா் மத்திய பிரதேச காவல் நிலையத்தில் புகாரளித்தனா். இதன் அடிப்படையில் பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின்கீழ் கடத்தல் தொடா்பான பிரிவுகள், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், 2006 மற்றும் பட்டியலினத்தவா்/பழங்குடியினா் (வன்கொடுமைகள் தடுப்புச்) சட்டம், 1989 -இன்கீழ் முகமது ஃபா்மான் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.