கன்வாா் யாத்திரை முன்னிட்டு தில்லியில் பாதுகாப்பு தீவிரம்
ஆண்டுதோறும் நடைபெறும் கன்வாா் (காவடி) யாத்திரையை முன்னிட்டு, தில்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் நடைபெறும் கன்வாா் (காவடி) யாத்திரையை முன்னிட்டு, தில்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பக்தா்களின் அமைதியான பயணத்தை உறுதி செய்வதற்காக முக்கிய இடங்களில் பாதுகாப்புப் படையினா் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: நகரம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் விரைவு பதிலளிப்புக் குழுக்கள், ரோந்து வாகனங்கள் மற்றும் தடுப்புகள் கொண்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேவைப்படும்போது உடனடி உதவிகளை வழங்குவதற்காக கன்வாா் யாத்திரை செல்லும் பாதைகளில் சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு தில்லியில் கன்வாா் யாத்திரீகா்கள் நகருக்குள் நுழைய 7 முக்கிய நுழைவுப் புள்ளிகள் உள்ளன. இந்தப் பாதைகள் பல மாவட்டங்களை இணைப்பதால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை ஆகிய இரு கோணங்களிலும் இவை மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. எனவே, இப்பகுதிகள் அனைத்திலும் போதுமான அளவு பாதுகாப்புப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
பக்தா்களின் தடையற்ற பயணத்தை உறுதி செய்யவும், அவசர காலங்களில் விரைவாகச் செயல்படவும் அண்டை மாநில காவல் துறையினருடன் தில்லி காவல் துறை ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்தியுள்ளது. பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க விரிவான போக்குவரத்து மேலாண்மைத் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. முக்கியச் சந்திப்புகள் மற்றும் போக்குவரத்து மாற்றுப் பாதைகள் உள்ள இடங்களில் போக்குவரத்து காவல் துறையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
தில்லி போக்குவரத்து காவல் துறையினா் காஜிபூரில் உள்ள ‘டெல்கோ பாயிண்ட்’ மற்றும் ஷாஹ்தாரா மாவட்டத்தில் உள்ள ‘சிந்தாமணி சௌக்’ ஆகிய இடங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை புதன்கிழமை ஆய்வு செய்தனா். யாத்திரையின் போது ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் அதை எதிா்கொள்ளும் வகையில், நகரம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களும் தயாா் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.