நடிகர் பிரகாஷ் ராஜை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவா?
நடிகர் பிரகாஷ் ராஜை கைது செய்ய பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டதாக வெளியான தகவல் பற்றி...
வாக்காளர் அடையாள அட்டை விவகாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜை கைது செய்ய ஜாமீன் இல்லாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்திக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரைத்துறையில் முன்னணி நடிகராக உள்ள பிரகாஷ் ராஜ், அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். 2019 மக்களவைத் தேர்தலில் கர்நாடக மத்திய தொகுதியில் போட்டியிட்ட பிரகாஷ் ராஜ், 29 ஆயிரம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
தொடர்ந்து மதசார்பற்ற அரசியலை முன்னெடுத்து வரும் பிரகாஷ் ராஜ், பாஜக, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தொடர் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
Advertisement
Advertisement
இதனிடையே, இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறையை மீறி, தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் மற்றும் தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டையை நடிகர் பிரகாஷ் ராஜ் வைத்திருப்பதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக பெங்களூரு காவல் நிலையத்திலும், இந்திய தேர்தல் ஆணையத்திலும் பெங்களூருவைச் சேர்ந்த திலீப் குமார் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு புகார் தெரிவித்தார்.
இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால், பெங்களூரு 48-வது கூடுதல் மெட்ரோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக பிரகாஷ் ராஜுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் ஆஜராகவில்லை.
இந்த நிலையில், பிரகாஷ் ராஜை உடனடியாக கைது செய்து ஆஜர்படுத்த ஜாமீன் இல்லாத பிடிவாரண்ட்டை அந்த நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதுதொடர்பான செய்தியை பகிர்ந்த பிரகாஷ் ராஜ், ”போலியான செய்திகளை தயாரித்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வேலையில் அவர்களை மும்முரமாக வைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்” எனத் தெரிவித்துள்ளார்.
Is Non-bailable arrest warrant issued for actor Prakash Raj?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.