முகப்பு
இந்தியா

போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை: குடியரசுத் துணைத்தலைவர்

போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை என குடியரசுத் துணைத்தலைவர் வலியுறுத்தியிருப்பது குறித்து...

Updated On : 28 ஜூன் 2026, 8:33 pm IST
பெங்களூரு ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழக நிகழ்ச்சியில், போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை என வலியுறுத்தி பேசிய குடியரசுத் துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்.
பகிர்:

பெங்களூரு: போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற இலக்கைக் கட்டமைக்க கல்வி நிறுவனங்கள், குடும்பங்கள், சுகாதாரப் பணியாளர்கள், சட்ட அமலாக்க முகமைகள், குடிமைச் சமூகம் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என குடியரசுத் துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில், ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் 31-ஆவது நிறுவன நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் திஷா போத் அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து 'போதைப்பொருள் இல்லாத பாரதம்' தொடர்பான மாநாட்டை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடத்தியது.

இதில் பங்கேற்று பேசிய குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்,

Advertisement

Advertisement

போதைப்பொருள் பயன்பாடு தனிநபரின் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல், கல்வித் திறன், உற்பத்தித்திறன், சமூக நல்லிணக்கம் மற்றும் தேசிய வளர்ச்சி ஆகியவற்றுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

​​போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற இலக்கைக் கட்டமைக்க கல்வி நிறுவனங்கள், குடும்பங்கள், சுகாதாரப் பணியாளர்கள், சட்ட அமலாக்க முகமைகள், குடிமைச் சமூகம் என அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான போராட்டம் தனிநபர்களிடமிருந்து தொடங்கி நாடு தழுவிய இயக்கமாக வளர வேண்டும்.

'போதைப்பொருள் இல்லாத பாரதம்' என்பது வெறும் போதைப்பொருள் இல்லாத நிலையை மட்டும் குறிப்பதல்ல, மாறாக ஆரோக்கியமான தேர்வுகள், விழிப்புணர்வுடன் கூடிய முடிவுகள், ஆதரவான குடும்பங்கள் மற்றும் மன உறுதி கொண்ட சமூகங்களை ஊக்குவிப்பதையும் குறிக்கிறது என்று கூறினார்.

தனிநபர்கள் தங்கள் மனதின் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், போதைப்பொருள் மனதைக் கட்டுப்படுத்தத் தொடங்கும்போது, ​​ஒரு நபர் தனது சொந்த வாழ்க்கையின் மீதான கட்டுப்பாட்டை இழப்பதாக தெரிவித்தார்.

போதைக்கு அடிமையாவதால் இழக்கப்படும் ஒவ்வொரு இளம் உயிரும் நாட்டின் ஆற்றல் இழப்பையே குறிக்கிறது. மாணவர்கள், குறிப்பாக எதிர்கால மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், உளவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்கள் ஆகியோர் விழிப்புணர்வுத் தூதுவர்களாக மாற வேண்டும் என்றும், போதைப்பொருள் பயன்பாட்டை எதிர்கொள்வதில் தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை, ஆராய்ச்சி மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான கொள்கை உருவாக்கம் ஆகியவற்றில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

போதை அடிமைத்தனம் மற்றும் மனநலம், நடத்தை அறிவியல் மற்றும் சமூகம் சார்ந்த தலையீடுகள் ஆகியவற்றில் கூடுதல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தவர், ஆதாரங்கள் நடவடிக்கைகளை வழிநடத்த வேண்டும் என்றும், ஆராய்ச்சிகள் கொள்கை உருவாக்கத்திற்கு உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான சிக்கல்களைக் கையாள்வதில் தொழில்நுட்பம், ஆலோசனை சேவைகள் மற்றும் சக நண்பர்களின் ஆதரவு அமைப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

போதைப்பொருள் இல்லாத கல்வி நிறுவனங்கள் குறித்த தனது தொடர்ச்சியான வலியுறுத்தலைச் சுட்டிக்காட்டிய சி. பி. ராதாகிருஷ்ணன், மூன்று மத்திய பல்கலைக்கழகங்களின் வேந்தராக, போதைப்பொருள் இல்லாத வளாகங்களை உருவாக்கத் தொடர்ந்து வாதிட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தில்லி பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட 'போதைப்பொருள் இல்லாத வளாகம்' பிரசாரம் மற்றும் இணையவழி உறுதிமொழி ஏற்புத் தளம் ஆகியவை, போதைப்பொருள் இல்லாத வளாகச் சூழலை உருவாக்குவதில் பங்காற்றியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், கர்நாடகாவில் நடைபெறும் தேசிய போலியோ ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக, குடியரசுத் துணைத் தலைவர் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி சொட்டு மருந்தை வழங்கினார். மேலும், பல ஆண்டுகளாக ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், அதன் முன்னாள் துணைவேந்தர்களை அவர் கௌரவித்தார்.

கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், ஆந்திரம் மாநில ஆளுநர் சையத் அப்துல் நசீர், கர்நாடக மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் சரண் பிரகாஷ் ஆர். பாட்டீல், கர்நாடக சுகாதாரம்- குடும்ப நலத்துறை அமைச்சர் யு.டி. காதர் ஃபரீத், ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பகவான் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

summary

Vice-President Calls for Greater Research in Addiction Medicine and Mental Health

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments