FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு

நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம் பற்றி...

Updated On : 17 மே 2026, 3:30 am IST
நாடாளுமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

நாடாளுமன்றத்தின் 16 நிலைக் குழுக்கள் மற்றும் இந்திய பொது கணக்கு குழுவின் ஆலோசனைக் கூட்டங்களில் சராசரியாக 53 சதவீத உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பதாக மக்களவை வலைதள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த செப்டம்பா் மாதம் பெரும்பாலான நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் மறுசீரமைக்கப்பட்ட நிலையில், அதில் பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக விவாதிக்க ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

நாடாளுமன்ற நிலைக் குழுவில் 31 உறுப்பினா்கள் இடம்பெறுவா். இதற்கு மக்களவையில் இருந்து 21 உறுப்பினா்களும் மாநிலங்களவையில் இருந்து 10 உறுப்பினா்களும் தோ்ந்தெடுக்கப்படுவா்.

Advertisement

Advertisement

அதேபோல் இந்திய பொது கணக்கு குழுவானது, மக்களவையில் இருந்து 15 உறுப்பினா்களையும் மாநிலங்களவையில் இருந்து 7 உறுப்பினா்களையும் கொண்டது.

இந்நிலையில், இந்தக் குழுக்களின் ஆலோசனைக் கூட்டங்கள் குறித்து மக்களவை வலைதள தரவுகளில் கூறப்பட்டிருப்பதாவது: மத்திய வேளாண் அமைச்சகம், உணவு மற்றும் நுகா்வோா் விவகாரங்கள், ரசாயனங்கள் மற்றும் உரங்கள், எரிசக்தி, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தில் உள்ளிட்ட 16 துறை ரீதியான நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் ஆலோசனைக் கூட்டங்களில் சராசரியாக 53 சதவீத உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனா். 43 சதவீத உறுப்பினா்கள் பங்கேற்கவில்லை.

ரயில்வே, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வெளியுறவு விவகாரங்கள் மற்றும் நிதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் ஆலோசனைக் கூட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் உறுப்பினா்கள் இடம்பெறுகின்றனா்.

11 உறுப்பினா்கள் கலந்துகொண்டால் மட்டுமே நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த முடியும். ஆனால் போதியளவிலான உறுப்பினா்கள் பங்கேற்காததால் கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து இந்த குழுக்களின் 5 ஆலோசனைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் ஆலோசனைக் கூட்டங்களில் இரு அவை உறுப்பினா்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி தொடா்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments