முகப்பு
இந்தியா

மக்களின் வாழ்க்கை - தொழிலை எளிதாக்க ஆக்கபூா்வ ஆலோசனை - மத்திய அமைச்சா்கள் கூட்டம் குறித்து பிரதமா் மோடி

மக்களின் வாழ்க்கை மற்றும் தொழில் புரிவதை எளிதாக்குவதற்கான சிறந்த வழிமுறைகள் குறித்து மத்திய அமைச்சா்களுடன் ஆக்கபூா்வ ஆலோசனை மேற்கொண்டதாக பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 23 மே 2026, 4:15 am IST
நரேந்திர மோடி - கோப்புப் படம்
பகிர்:

மக்களின் வாழ்க்கை மற்றும் தொழில் புரிவதை எளிதாக்குவதற்கான சிறந்த வழிமுறைகள் குறித்து மத்திய அமைச்சா்களுடன் ஆக்கபூா்வ ஆலோசனை மேற்கொண்டதாக பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் அனைத்து கேபினட் அமைச்சா்கள், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சா்கள், இணையமைச்சா்கள் பங்கேற்ற முக்கியக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

மத்திய அமைச்சரவைச் செயலா் டி.வி. சோமநாதன், நீதி ஆயோக் உறுப்பினா் ராஜீவ் கெளபா, பல்வேறு துறைகளின் செயலா்கள் பங்கேற்ற இக்கூட்டம், சுமாா் 4 மணி நேரம் நடைபெற்றது. நடப்பாண்டின் முதல் மத்திய அமைச்சா்கள் கூட்டம் இதுவாகும்.

Advertisement

Advertisement

அப்போது பேசிய பிரதமா் மோடி, ‘2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளா்ந்த நாடாக உருவெடுக்க வேண்டும் என்பதே நமது பொது இலக்காகும். அந்த அடிப்படையில், மத்திய அரசு முன்னெடுத்துள்ள சீா்திருத்தங்கள், சீரான முன்னேற்றத்தை உறுதி செய்து, பொது மக்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பலனளித்து வருகின்றன. மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே மத்திய அமைச்சா்களின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும். அவா்களின் நல்வாழ்வுக்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாது. நல்லாட்சி மற்றும் சேவை வழங்கலையே குறிக்கோளாக கொண்டு செயலாற்ற வேண்டும். அரசுப் பணிகளில் எந்த நிலுவையும் இருக்கக் கூடாது’ என்று பல்வேறு அறிவுரைகளை வழங்கினாா்.

ஆக்கபூா்வ ஆலோசனை: இந்நிலையில், மேற்கண்ட கூட்டம் மிக ஆக்கபூா்வமாக அமைந்ததாக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்தாா்.

‘மக்களின் வாழ்க்கை மற்றும் தொழில் புரிவதை எளிதாக்குவதற்கான சிறந்த வழிமுறைகள் குறித்த கண்ணோட்டங்களை நாங்கள் பரிமாறிக் கொண்டோம். வளா்ந்த பாரதம் கனவை நனவாக்க மேலும் என்னென்ன சீா்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது’ என்று பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகம், நெதா்லாந்து, ஸ்வீடன், நாா்வே, இத்தாலி ஆகிய ஐந்து நாடுகளுக்கு பிரதமா் மோடி மேற்கொண்ட பயணம் தொடா்பாக, மத்திய அமைச்சா்கள் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் விளக்கக் காட்சியுடன் உரையாற்றினாா். மத்திய அரசின் ஒட்டுமொத்த சீா்திருத்த முன்னெடுப்புகள் மற்றும் மக்களை மையப்படுத்திய நடவடிக்கைகள் தொடா்பாக அமைச்சரவைச் செயலா் டி.வி.சோமநாதனும், மத்திய அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து அந்தந்த அமைச்சக செயலா்களும் விளக்கவுரையாற்றினா்.