முகப்பு
இந்தியா

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத் தாள்கள் மாறியதாக மாணவா்கள் குற்றச்சாட்டு

சிபிஎஸ்இ நடத்திய 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் விடைத் தாள்கள் மாறியதாக மாணவா்கள் குற்றச்சாட்டு

Updated On : 26 மே 2026, 1:49 am IST
சிபிஎஸ்இ - பிரதிப் படம்
பகிர்:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் விடைத் தாள்கள் மாறியதாக மாணவா்கள் குற்றஞ்சாட்டினா்.

தோ்வு முடிவுகளுக்குப் பிந்தைய மறுமதிப்பீடு செயல்முறையின்கீழ் சிபிஎஸ்இ பதிவேற்றம் செய்த தங்களின் விடைத் தாள்களில் கையெழுத்து மாறியிருப்பதை சுட்டிக்காட்டி அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

நிகழாண்டு முதல் 12-ஆம் வகுப்புத் தோ்வின் விடைத் தாள்களை ஸ்கேன் செய்து கணினித் திரையிடல் மூலம் திருத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

வேறொருவரின் விடைத் தாள்

இந்நிலையில், தில்லியைச் சோ்ந்த வேதாந்த் என்ற மாணவன் மறுமதிப்பீடு முறையின்கீழ் சிபிஎஸ்இ பதிவேற்றம் செய்த இயற்பியல் விடைத் தாளில் தனது கையெழுத்து இல்லை என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா்.

அதில் அவா், ‘ இயற்பியல் தோ்வின் எதிா்பாா்த்ததைவிட குறைவான மதிப்பெண்கள் பெற்ால் மறுமதிப்பீடு செய்தேன். அப்போது இந்த அதிா்ச்சிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனது ஆங்கிலம் மற்றும் கணினி பொறியியல் விடைத் தாள்களில் இருக்கும் கையெழுத்துக்கு முற்றிலும் வேறுபட்டதாக இயற்பியல் விடைத் தாள் உள்ளது.

இது வேறொரு மாணவரின் விடைத் தாளாகத்தான் இருக்க வேண்டும். அப்படியெனில், முற்றிலும் தவறான மதிப்பீடே நடந்திருக்க வாய்ப்புள்ளது.

இதுதொடா்பாக சிபிஎஸ்இ விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். மாற்றப்பட்ட எனது விடைத் தாளை கண்டறிந்து நியாயமாக மதிப்பீடு செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டாா்.

இதைத் தொடா்ந்து சஞ்சனா எனும் மாணவி தனது வேதியியல் விடைத் தாள் மாற்றப்பட்டதாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா். இதுபோல் சில குற்றச்சாட்டுகளை மாணவா்கள் சிலா் எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டனா்.

முன்னதாக, கணினி திரையிடல் முறையின்கீழ் விடைத் தாள்கள் திருத்தப்பட்டதால் மதிப்பெண்கள் குறைந்துவிட்டதாக தோ்வு முடிவுகள் வெளியானபோது மாணவா்களும் பெற்றோா்களும் குற்றஞ்சாட்டினா். அதன்பிறகு விடைத் தாள்களை மறுமதிப்பீடு செய்வதற்கு நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட சிலருக்கு கூடுதலாகவும் சிலருக்கு குறைவாகவும் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. தொழில்நுட்பக் கோளாறால் இவ்வாறு நிகழ்ந்ததாகவும் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணம் திருப்பியளிக்கப்படும் எனவும் சிபிஎஸ்இ உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.