‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளை உருவாக்காது’... அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் ஆதரவுக்குரல்!
ட்ரோல்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில்லை. முதலீடுகளே உருவாக்கும் என்றும் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளதைப் பற்றி...
ட்ரோல்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில்லை. முதலீடுகளே உருவாக்கும் என்றும் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புதிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா இன்று (மே.28) காலை விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த விடியோவில், “நீண்ட காலம் காத்திருக்க வைக்கும் அரசை யாரும் விரும்புவதில்லை. கோப்புகள், ஒப்புதல்கள், தாமதங்கள், காத்திருப்பு போன்றவற்றை சரிசெய்ய முதல்வர் விஜய் என்னை நியமித்துள்ளார்.
Advertisement
Advertisement
21 நாள்களில் நிறுவனங்களுக்கு அனுமதி, ஒற்றைச் சாளர ஒப்புதல், அமைச்சர் மற்றும் முதல்வரிடம் நேரடியாகப் பிரச்சினைகளைக் கொண்டு செல்லும் முறை என எங்கள் வாக்குறுதிகளை அளிக்கிறோம்.
செயற்கை நுண்ணறிவு அமைச்சகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு நகரம், ட்ரோன் வழித்தடம், மின்சார வாகன உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன் மற்றும் விண்வெளிப் பொருளாதாரம் என வளர்ச்சி என்பது ஒன்று, இரண்டு மாவட்டங்களுக்காக மட்டுமன்றி மாநிலம் முழுவதும் பரவிய வளர்ச்சியாக இருக்கும்” என்றும் விடியோவில் பேசியிருந்தார்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போலவும், கல்லூரி விளம்பரம் போலவும் அமைச்சர் கீர்த்தனா விடியோ வெளியிட்டு முதலீடுகளை எப்படி ஈர்ப்பார் என்று பலரும் விமர்சனங்களை தெரிவித்திருந்தனர்.
அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேரும் வகையில், அமைச்சர் கீர்த்தனா ரீல்ஸ்களை வெளியிட்டிருக்கிறார் என்று ஒரு தரப்பும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்க ரீல்ஸில் அழைப்பு விடுப்பது எப்படி? என ஒரு தரப்பும் விமர்சித்தனர்.
அதைத் தொடர்ந்து, அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆதரவாக அவரது விடியோவில் ஆந்திரத்தின் தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சரும், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ், தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “கீர்த்தனா அவர்களே, முதலீட்டாளர்களை நீங்கள் முயற்சியுடன் அணுகுவதைப் பாராட்டுகிறேன். இன்று ஒவ்வொரு தொழில்துறை அமைச்சரும் தங்கள் மாநிலத்தை வணிகமயமாக்குவதற்கு முதலீட்டாளர்களுடன் கலந்துரையாட வேண்டும். மேலும், வேலைவாய்ப்பை உருவாக்க முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையைப் பெற வேண்டும்.
மாநிலங்கள் முயற்சியுடன் செயல்பட்டு இந்தியாவின் வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும் பலமுறை தெரிவித்திருக்கிறார். நிச்சயமாக, ஆந்திரம் தமிழ்நாட்டுக்கு ஆரோக்கியமான போட்டியை வழங்கும்!
தேவையற்றவைகளைப் புறக்கணியுங்கள் - ட்ரோல்கள் வேலைகளை உருவாக்குவதில்லை. முதலீடுகள்தான் வேலைகளை உருவாக்குகின்றன!” எனப் பதிவிட்டுள்ளார்.
Andhra Minister Nara Lokesh has stated that And ignore the noise - Trolls don’t create jobs. Investments do!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.