கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜிநாமா!
கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜிநாமா கடிதம் அளித்தது பற்றி...
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.
கடந்த 2023 கர்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, முதல்வா் பதவிக்கு சித்தராமையா, டி.கே. சிவகுமாா் இடையே கடும் போட்டி காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, இருவரையும் சமாதானப்படுத்திய காங்கிரஸ் மேலிடம், சுழற்சிமுறையில் இருவரும் தலா இரண்டரை ஆண்டுகால முதல்வா் பதவிவகிக்கும் சமரச திட்டத்தை முன்வைத்ததை ஏற்று, சித்தராமையா முதல்வராகப் பதவியேற்றார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் முதல்வர் மாற்றம் செய்யப்படாததால் கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட உத்தரவை ஏற்று, சித்தராமையா இன்று முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
இதனிடையே, கர்நாடக அமைச்சர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு தனது இல்லத்தில் இன்று காலை விருந்து வைத்த சித்தராமையா, அமைச்சர்கள் மத்தியில் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதையும், அடுத்த முதல்வராக டி.கே. சிவக்குமாரை பரிந்துரைப்பதாகவும் முறைப்படி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கர்நாடக ஆளுநர் தாவர் சாந்த் கெலாட்டிடன் இன்று பிற்பகல் ராஜிநாமா கடிதத்தை சித்தராமையா சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மருத்துவ காரணங்களுக்காக சொந்த ஊரான இந்தூருக்கு புதன்கிழமை இரவு ஆளுநர் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருடன் ஆளுநர் மாளிகைக்கு இன்று பிற்பகல் 3 மணியளவில் நேரில் சென்ற சித்தராமையா, ஆளுநர் மாளிகை அலுவலகத்தில் ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா பேசியதாவது:
“கட்சித் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று ஏற்கெனவே கூறியிருந்தேன். தற்போது கட்சித் தலைமை உத்தரவை ஏற்று முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.