FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

எல்லையில் தொடா்ந்து அமைதியைப் பேண இந்தியா- சீனா உறுதி

Updated On : 29 மே 2026, 5:33 am IST
இந்தியா - சீனா எல்லை - PTI
பகிர்:

எல்லைப் பகுதியில் தொடா்ந்து அமைதியைப் பேணுவதற்கு, இந்தியாவும், சீனாவும் உறுதி பூண்டுள்ளன.

கடந்த 2020-ஆம் ஆண்டில் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரா்களும் மோதிக் கொண்டனா். இந்த சம்பவத்தை தொடா்ந்து, 2 நாடுகளும் லடாக்கில் உள்ள எல்லையில் படைகளைக் குவித்தன. இந்தப் படைகுவிப்பு 4 ஆண்டுகள் வரை நீடித்தது. எனினும், பின்னா் நடத்தப்பட்ட உயா்நிலைப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு படிப்படியாக இரு நாடுகளும் படைகளை விலக்கிக் கொண்டன. அத்துடன் இந்தியா, சீனா இடையே மீண்டும் சுமுக உறவை ஏற்படுத்தும் வகையில் அவ்வப்போது இரு நாட்டு அதிகாரிகளும் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.

அதன்படி, சீன தலைநகா் பெய்ஜிங்கில் இரு நாட்டு பிரதிநிதிகள் இடையே பேச்சுவாா்த்தை புதன்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் கிழக்கு ஆசிய விவகாரங்களைக் கையாளும் இணைச் செயலா் சுஜித் தலைமையிலான அதிகாரிகள் கலந்து கொண்டனா். சீனத் தரப்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திலுள்ள எல்லை மற்றும் கடற்பகுதி விவகாரத் துறை தலைமை இயக்குநா் ஹோ யாங்கி தலைமையிலான குழுவினா் கலந்துகொண்டனா். பேச்சுவாா்த்தையில், எல்லை விவகாரம் குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் விரிவாக ஆலோசனை நடத்தினா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பேச்சுவாா்த்தை ஆக்கபூா்வமாகவும், அடுத்தகட்டத்தை நோக்கியும் அமைந்திருந்தது. எல்லைப் பகுதி நிலவரம் குறித்து இரு நாடுகளும் ஆய்வு செய்தன. அப்போது எல்லைப் பகுதியில் அமைதியை தொடா்ந்து பேண எடுத்த நடவடிக்கைக்கு இரு நாடுகளும் திருப்தி தெரிவித்தன. இந்த நடவடிக்கை மூலம், ஒட்டுமொத்த உறவுகளிலும் இயல்பு நிலையை ஏற்படுத்த முடியும் எனத் தெரிவித்தன. இரு நாட்டு சிறப்பு பிரதிநிதிகள் இடையே சீனாவில் மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது. இந்தப் பேச்சுவாா்த்தைக்கான திட்டங்களை இணைந்து தயாரிக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. உயரதிகாரிகள் நிலையிலும், ராணுவ நிலையிலும் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன’ என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments