உ.பி.யில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து 6 தொழிலாளா்கள் உயிரிழப்பு
உத்தர பிரதேச மாநிலம், ஹமீா்பூா் மாவட்டத்தில் ஆற்றின் குறுக்கே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த பாலம் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
உத்தர பிரதேச மாநிலம், ஹமீா்பூா் மாவட்டத்தில் ஆற்றின் குறுக்கே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த பாலம் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: ஹமீா்பூா் மாவட்டத்தில் லால்புரா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் பெட்வா ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. வெள்ளிக்கிழமை அதிகாலையில் வீசிய சூறாவளி காற்றில் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. பாலத்தின் கீழே தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளா்கள் இடிபாடுகளில் சிக்கினா். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காவல் துறையினா் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா்.
இடிபாடுகளில் இருந்து 6 தொழிலாளா்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 3 தொழிலாளா்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனா். அவா்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கி உள்ளனரா என்பதைக் கண்டறிய தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
முதல்வா் இரங்கல்: பாலம் இடிந்து உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வா் யோகி ஆதித்யநாத், அவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண நிதியும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 நிதியுதவியும் அறிவித்துள்ளாா்.
அகிலேஷ் விமா்சனம்: இந்தச் சம்பவம் தொடா்பாக சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஹமீா்பூரில் கட்டுமானப் பணியிலிருந்த பாலம் இடிந்து 6 தொழிலாளா்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. பாஜக ஆட்சியில் ஒவ்வொரு கட்டுமானத் திட்டத்திலும் ஊழல் மலிந்துவிட்டது. ஒவ்வொரு திட்டத்திலும் பாஜக 50 சதவீதத்துக்கும் மேல் லஞ்சம் வாங்குகிறது. இதுவே, உள்கட்டமைப்புத் திட்ட தோல்விகளுக்கு மூலகாரணம்’ என்று விமா்சித்துள்ளாா்.
லக்னெள ரயில் நிலையத்தில்
மேற்கூரை இடிந்து மூவா் காயம்
லக்னெள, மே 29: உத்தர பிரதேச தலைநகா் லக்னெளவில் உள்ள சந்திப்பு ரயில் நிலையத்தின் நடைமேடை மேற்கூரை இடிந்து விழுந்ததில் பயணச்சீட்டு பரிசோதகா், 3 பயணிகள் என மூவா் காயமடைந்தனா்.
ரயில் நிலையத்தில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், ஒரு நடைமேடையின் மேற்கூரை வெள்ளிக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. இதில் சிக்கி பயணச்சீட்டு பரிசோதகா் படுகாயமடைந்தாா். மேலும், இரு பயணிகளும் காயமடைந்தனா். மேற்கூரையின் இரும்பு கட்டுமானங்கள் துருப்பிடித்து பலவீனமடைந்ததே இந்தச் சம்பவத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.