ஜூன் 3-ல் கர்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்பு!
கர்நாடக புதிய முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்பது பற்றி..
கர்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் ஜூன் 3-ம் தேதி பதவியேற்க உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஜி.சி. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து மே 20ஆம் தேதியுடன் 3 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. 2028ஆம் ஆண்டில் கா்நாடக சட்டப் பேரவை தோ்தல் நடக்கவுள்ள நிலையில், புதியவா்களுக்கு வாய்ப்பளிக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டது. அதன்படி, துணை முதல்வராக உள்ள டி.கே.சிவகுமாா் தலைமையில் புதிய அரசு அமைக்கவுள்ளது.
அதற்காக, முதல்வா் சித்தராமையா தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா். ஆளுநா் தாவா்சந்த் கெலாட் சொந்த ஊருக்கு சென்றிருந்ததால், அவரது சிறப்புச் செயலாளா் பிரபுசங்கரிடம் தனது ராஜிநாமா கடிதத்தை சித்தராமையா அளித்திருந்தாா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பெங்களூருக்கு வெள்ளிக்கிழமை திரும்பிய ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் சித்தராமையா அளித்திருந்த ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளாா். இதுதொடா்பாக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் பிறப்பித்துள்ள உத்தரவில், அரசமைப்புச் சட்டப் பிரிவு 164 (1) இன்படி அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, கா்நாடக ஆளுநராக, முதல்வா் சித்தராமையா அளித்திருந்த ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு, அவரது தலைமையில் அமைந்திருந்த அமைச்சரவையை உடனடியாக கலைக்கிறேன். மாற்று ஏற்பாடு செய்யும்வரை முதல்வராக சித்தராமையாவே தொடா்வாா் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
இதைத் தொடா்ந்து புதிய முதல்வரை தோ்வு செய்வதற்காக பெங்களூரில் இன்று மாலை 4 மணிக்கு விதான சௌதாவின் 3 ஆவது மாடியில் உள்ள மாநாட்டு அரங்கில் காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழு கூட்டம் நடைபெற்றது.
முதல்வா் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழுவின் புதிய தலைவராக டி.கே. சிவகுமாா் ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டார். இத்தீா்மானத்தை முதல்வா் சித்தராமையா முன்மொழிந்துள்ளார்.
இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளா்கள் கே.சி. வேணுகோபால், ரன்தீப்சிங் சுா்ஜேவாலா உள்ளிட்டோா் பங்கேற்றனர்.
காங்கிரஸ் செயல் தலைவர் ஜி.சி. சந்திரசேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கர்நாடகத்தின் புதிய முதல்வராக ஜூன் 3-ஆம் டி.கே சிவகுமார் பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் 'கிளாஸ் ஹவுஸ்' அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. பதவியேற்பு விழா நடைபெறும் துல்லியமான நேரம் பின்னர் இறுதி செய்யப்பட்டு, அன்றைய தினமே அறிவிக்கப்படும்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 10,000 முதல் 15,000 பேருந்துகளை முன்பதிவு செய்து, பெங்களூருக்கு மக்களை அழைத்து வந்து ஒரு பிரம்மாண்டமான விழாவாக நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை மனதில் கொண்டு அந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டது.
பதவியேற்பு விழா ஆடம்பரமாக இல்லாமல் முடிந்தவரை எளிமையாக நடத்தப்பட வேண்டும். வெறும் வெளிப்படையான பகட்டையோ, ஆடம்பரத்தையோ காட்டுவதற்குப் பதிலாக, உழைப்பு மற்றும் சேவை மனப்பான்மையை பிரதிபலிப்பதாக அமைய வேண்டும். இந்த நிகழ்ச்சி எளிமையான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று கட்சி முடிவெடுத்து, அதற்கான வழிகாட்டுதல்களையும் பிறப்பித்துள்ளது.
போக்குவரத்து நெரிசலோ, பொதுமக்களுக்கு சிரமமோ ஏற்படாத வகையில், கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் யாரும் விழா நடைபெறும் இடத்திற்கு முண்டியடித்துக்கொண்டு வர முயற்சிக்க வேண்டாம், ஒத்துழைப்பு அளிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The swearing-in ceremony of the new Chief Minister will be held on June 3 at the Glass House of Lok Bhavan here, said Congress state unit working president G C Chandrashekhar on Saturday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.