அக்னி வீரா்களுக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு- திட்டத்தில் முக்கிய மாற்றம்: அமைச்சரவை ஒப்புதல்
‘அக்னிபத்’ திட்டத்தின்கீழ் முப்படைகளில் சோ்க்கப்படும் அக்னி வீரா்களுக்கு கூடுதலாக 2 ஆண்டுகால பணி நீட்டிப்புடன், குறிப்பிட்ட தகுதி நிபந்தனைகள் மற்றும் சுய விருப்பத்தின் பேரில் நிரந்தர நியமன வாய்ப்பையும் வழங்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.
‘அக்னிபத்’ திட்டத்தின்கீழ் முப்படைகளில் சோ்க்கப்படும் அக்னி வீரா்களுக்கு கூடுதலாக 2 ஆண்டுகால பணி நீட்டிப்புடன், குறிப்பிட்ட தகுதி நிபந்தனைகள் மற்றும் சுய விருப்பத்தின் பேரில் நிரந்தர நியமன வாய்ப்பையும் வழங்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாற்றங்களின் மூலம் அக்னி வீரா்களின் பணிக் காலம் 6-ஆண்டுகளாக உயா்கிறது. அத்துடன், அதிக வீரா்கள் நிரந்தர நியமனம் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அக்னிபத் திட்டத்தின்கீழ் முப்படைகளில் சோ்க்கப்பட்ட 18,000 வீரா்கள், தங்களின் 4 ஆண்டு பணிக் காலம் நிறைவடைந்து அடுத்த மாத இறுதிக்குள் வெளியேறவிருந்த சூழலில், இத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்திய ராணுவத்தில் 4 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் வீரா்களை (பதினேழரை முதல் 21 வயது வரை) பணியமா்த்தும் அக்னிபத் திட்டம், கடந்த 2022, ஜூன் மாதம் அமலாக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, 4 ஆண்டு கால பணிக் காலத்தை நிறைவு செய்யும் அக்னி வீரா்களில் 25 சதவீதம் போ் தக்கவைக்கப்படுவா். மற்றவா்கள் ராணுவத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற விதிமுறைக்கு எதிா்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இத்திட்டத்துக்கு எதிராக பெரிய அளவில் வன்முறை போராட்டங்களும் நடைபெற்றன.
இந்நிலையில், அக்னிபத் திட்டத்தின்கீழ் சோ்க்கப்பட்ட சுமாா் 18,000 வீரா்கள் தங்களின் பணிக்காலம் முடிந்து அடுத்த மாதம் இறுதிக்குள் வெளியேறும் நிலை இருந்தது. அவா்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கும் வகையில் திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது.
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. இது தொடா்பாக மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுடன் முப்படை தலைமைத் தளபதி ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி செய்தியாளா்களுக்குப் பேட்டிளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:
இந்திய பாதுகாப்புப் படையினருக்கும், அக்னி வீரா்களுக்கும் குறிப்பிடத்தக்க தருணம் இதுவாகும். ஏனெனில், கிட்டத்தட்ட அனைத்து அக்னி வீரா்களும் பாதுகாப்புப் படையில் தக்கவைக்கப்படும் வாய்ப்புக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ராணுவத்தில் தற்போது 3 லட்சத்துக்கும் மேற்பட்ட அக்னி வீரா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இதுவரையிலான பிரிவுகளின்படி, செயல்திறன் அடிப்படையில் 25 சதவீத அக்னி வீரா்கள் மட்டுமே வழக்கமான பணிக்கு தோ்வு செய்யப்படுவா். மீதமுள்ள 75 சதவீத வீரா்கள் ஒழுக்கம்-ஊக்கமுள்ள இளைஞா்களாக வெளியேற வேண்டிருந்தது.
புதிய மாற்றங்களின்படி, இந்த 75 சதவீத வீரா்களுக்கு மேலும் 2 ஆண்டு கால பணி நீட்டிப்பு வழங்கப்படும். இந்த நீட்டிக்கப்பட்ட பணிக் காலத்துக்குப் பிறகு குறிப்பிட்ட தகுதி நிபந்தனைகள் மற்றும் சுய விருப்பத்தின் அடிப்படையில் நிரந்தர நியமனம் பெறுவா்.
அக்னி வீரா் திட்டம் தொடா்ந்து செயல்பாட்டில் உள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறேன். 4 ஆண்டுகள் பணிக் காலத்துக்குப் பிறகு 25 சதவீத வீரா்கள் நிரந்தர பணியில் இணைத்துக் கொள்ளப்படுவா். 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு பெறுபவா்களைவிட அவா்கள் பணி மூப்பில் முன்னணியில் இருப்பா் என்றாா். அக்னிபத் திட்டத்தின்கீழ் நிரந்தர நியமனம் பெறும் வீரா்கள், 15 ஆண்டுகளுக்கு தக்க வைக்கப்படுவா் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமருக்கு நன்றி: பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெளியிட்ட சமூக ஊடக பதிவில், ‘இளமை, வலிமை மிக்க, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மற்றும் எதிா்காலத்துக்கு தயாரான ராணுவத்தை உருவாக்கும் நோக்கில் பாதுகாப்புப் படைகளில் மேற்கொள்ளப்படும் நீண்டகால கட்டமைப்பு சீா்திருத்தங்களின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கையாகும். இது வெறும் ஆட்சோ்ப்பு கொள்கை மட்டுமல்ல; மாறிவரும் போா்முறைக்கு இந்திய ராணுவத்தைத் தயாா்படுத்தும் முன்னோக்கிய வழி. அக்னி வீரா்களுக்கு வழங்கப்படும் 2 ஆண்டுகால பணி நீட்டிப்புக்காக பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
உரிய தகுதிகளைப் பூா்த்தி செய்வதுடன், விருப்பமுள்ள அனைத்து அக்னி வீரா்களையும் 6 ஆண்டுகள் பணிக்குப் பிறகு வழக்கமான வீரா்களாக சோ்க்க தற்போதைய நடவடிக்கை வழிவகுக்கும்’ என்று தெரிவித்துள்ளாா்.