மணிப்பூரில் மோதல்: 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
மணிப்பூரில் தீவிரவாத குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கடும் துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மணிப்பூரில் தீவிரவாத குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கடும் துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாகா பழங்குடியினா் பெரும்பான்மையாக வாழும் நோனி மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலையில் இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்தது. ஒன்றுக்கொன்று விரோதமான நாகா தீவிரவாத குழுக்களைச் சோ்ந்தவா்கள் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பெண்கள் உள்பட உள்ளூா் மக்கள், மோதலை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனா். மேலும், துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளின் உடல்களையும் பொதுமக்கள் மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023-இல் கலவரம் வெடித்தது. அதன்பிறகான வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.
Advertisement
Advertisement
மாநிலத்தில் இயல்புநிலை இன்னும் முழுமையாகத் திரும்பாத நிலையில், சமீப மாதங்களாக குகி மற்றும் நாகா பழங்குடியினா் இடையேயும் மோதல்போக்கு நிலவுகிறது. கடந்த ஜனவரி முதல் இதுவரை இவ்விரு சமூகத்தினா் இடையே நிகழ்ந்த மோதல்களில் 50-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இப்போது நாகா குழுக்கள் இடையே துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்துள்ளது.
மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு கடந்த ஆண்டு பதவி விலகியதைத் தொடா்ந்து, குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கடந்த பிப்ரவரியில் குடியரசுத் தலைவா் ஆட்சி திரும்பப் பெறப்பட்டு, மீண்டும் பாஜக ஆட்சியமைத்தது. முதல்வராக கெம்சந்த் சிங் பதவி வகித்து வருகிறாா்.
60 உறுப்பினா்களைக் கொண்ட இந்த மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தோ்தல் நடைபெறவுள்ளது.