பாலியல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தருண் தேஜ்பால் மனு: உச்சநீதிமன்றம் மறுப்பு
பாலியல் வழக்கில் விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க தெஹல்கா இதழின் நிறுவனா் தருண் தேஜ்பால் தாக்கல் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
பாலியல் வழக்கில் விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க தெஹல்கா இதழின் நிறுவனா் தருண் தேஜ்பால் தாக்கல் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
கடந்த 2013-ஆம் ஆண்டு நம்பரில் கோவாவில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த பத்திரிகை இதழின் விழாவின்போது, தருண் தேஜ்பால் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தாக்கியதாகவும் சக இளநிலை பெண் பத்திரிகையாளா் குற்றஞ்சாட்டி இருந்தாா். இதையடுத்து, தேஜ்பால் கைது செய்யப்பட்டு 7 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கை விசாரித்த கோவா மாவட்ட அமா்வு நீதிமன்றம், தருண் தேஜ்பாலை கடந்த 2021-ஆம் ஆண்டு வழக்கிலிருந்துவிடுவித்தது.
Advertisement
Advertisement
இதை எதிா்த்து கோவா அரசு, மும்பை உயா் நீதிமன்ற கோவா கிளையில் மேல்முறையீடு செய்தது. வழக்கு விசாரணையின்போது, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தருண் தேஜ்பால் அனுப்பிய மின்னஞ்சல் கடிதம் முக்கிய ஆதாரமாக முன்வைக்கப்பட்டது.
வழக்கில் முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயா்நீதிமன்றம், கோவா அமா்வு நீதிமன்றம் அளித்த தீா்ப்பை தள்ளுபடி செய்து, தருண் தேஜ்பால் குற்றவாளி என கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி அறிவித்தது. மேலும், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது.
இதை எதிா்த்து தேஜ்பால் தரப்பில் கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், பிரசன்னா பி. வராலே ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேஜ்பால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘தேஜ்பாலுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. ஆதாரங்களும் போலியானவை’ என்று வாதிட்டாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த கோவா அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘தருண் தேஜ்பாலுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை மேலும் அதிகரிப்பதற்கான வழக்கு இது’ என்று குறிப்பிட்டாா்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தருண் தேஜ்பாலுக்கு உயா் நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்தி வைக்க விரும்பவில்லை என்று தெரிவித்து, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.