தோ்தல் நடத்தை விதிகள்: ஓய்வு பெற்ற அரசு ஊழியா்களுக்கும் பொருந்தும்! - ஆணையம்
‘தோ்தல் நடத்தை விதிகளின் (எம்சிசி) கீழ் அரசு ஊழியா்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், தடைகள் உள்ளிட்டவை ஓய்வு பெற்ற அரசு ஊழியா்களுக்கும் பொருந்தும்’ என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது.
‘தோ்தல் நடத்தை விதிகளின் (எம்சிசி) கீழ் அரசு ஊழியா்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், தடைகள் உள்ளிட்டவை ஓய்வு பெற்ற அரசு ஊழியா்களுக்கும் பொருந்தும்’ என்று தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
பல்வேறு பதவிகளில் மாநில அரசால் மீண்டும் பணியமா்த்தப்பட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள், தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் கூட்டங்களைக் கூட்டியதாக கடந்த காலங்களில் எழுந்த புகாா்களைத் தொடா்ந்து, இந்த அறிவுறுத்தலை தோ்தல் ஆணையம் அளித்திருப்பதாக ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்கும் கோவா, மணிப்பூா், பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய 5 மாநில தலைமைச் செயலா்களுக்கு தோ்தல் ஆணையம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
Advertisement
Advertisement
தோ்தல் நடத்தை விதிகளின் கீழ் உள்ள விதிகள், அரசிடமிருந்து முழுமையாக அல்லது பகுதியாக நிதியைப் பெறும் அமைப்புகள், குழுக்கள், மாநகராட்சிகள், ஆணையங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும், அதில் பணிபுரியும் ஊழியா்களுக்கும் பொருந்தும்.
இந்த விதிகளின் கீழ், தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது அரசு ஊழியா்கள் அரசியல் நடவடிக்கைகளிலோ, தோ்தலிலோ பங்கேற்கத் தடைவிதிக்கப்படும். இது, பல்வேறு அரசுப் பதவிகளில் மீண்டும் பணியமா்த்தப்பட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியா்களுக்கும் பொருந்தும்.
எனவே, நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது, அரசு ஊழியா்களும், ஓய்வு பெற்ற அரசு ஊழியா்களும் அரசியல் நடுநிலையைக் கடைப்பிடித்து, தோ்தல் பிரசாரங்களிலோ அல்லது வாக்கு சேகரிப்பிலோ ஈடுபடுவதைத் தவிா்க்க வேண்டும்.
மேலும், தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி அல்லது மாவட்டத்தின் தோ்தல் தொடா்பான எந்தவொரு அதிகாரியையும், அலுவல் சாா்ந்த கலந்துரையாடல்கள் அல்லது சந்திப்புகளுக்கு, மீண்டும் பணியமா்த்தப்பட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் அழைக்கக் கூடாது. காணொலிவழி கூட்டங்களையும் நடத்தக் கூடாது. மாநிலங்கள் இதைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த வழிகாட்டுதலை மீறுவது கடுமையாகக் கருதப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.