என் தாய் பற்றி பொய்களைப் பரப்பிய பாஜகவினர், அவர் சொல்லும் உண்மைகளை படிக்கிறார்கள்! பிரியங்கா
சோனியா காந்தி சுயசரிதை புத்தகத்தை பாஜகவினர் விமர்சிப்பது குறித்து பிரியங்கா பதில்...
என் தாய் பற்றி பொய்களைப் பரப்பிய பாஜகவினர், இன்று அவர் சொல்லும் உண்மைகளை படிப்பதில் மகிழ்ச்சி என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, ‘பிலாங்கிங்: ஏ ஜா்னி ஆஃப் லவ்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கும் சுயசரிதை புத்தகம் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு தகவல்களை குறிப்பிட்டு பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், கேரள மாநிலம், வயநாடு தொகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரியங்கா காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பாஜகவின் விமர்சனங்களுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:
“இந்தியாவில் எனது தாயாரின் முதிர்ந்த வாழ்க்கை காலம் முழுவதும், பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் பலர் அவரைப் பற்றித் தங்களுக்குத் தோன்றியதையெல்லாம் பேசி வந்துள்ளனர். அவர்கள் பொய்களைக் கூறியுள்ளனர், கதைகளைக் கட்டமைத்துள்ளனர், மேலும் அவரைப் பற்றி இல்லாத கதைகளைக்கூடப் புனைந்துள்ளனர்.
ஆனால், எனது தாயார் இதற்கெல்லாம் அமைதியாகவே இருந்தார். இப்போது அவர் தனது கதையைச் சொல்கிறார். இதனைச் செய்ய அவருக்கு முழு உரிமையும் உள்ளது.
பாஜகவினர் தற்போது புத்தகத்தைப் படிக்கத் தயாராக இருப்பது நல்ல விஷயம். இவ்வளவு காலமாக அவர்கள் (பாஜக) எனது தாயாரைப் பற்றிப் பொய்களைப் பரப்பி வந்தனர், இப்போது அவர் உண்மையைச் சொல்கிறார். அவர்கள் அவரது புத்தகத்தைப் படிப்பது எனக்கு மகிழ்ச்சியே” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசுக்கு எதிரான போராட்டங்கள் குறித்து பிரியங்கா காந்தி பேசியதாவது:
”மத்திய அரசின் சிக்கல் என்னவென்றால், தாங்கள் எதற்கும் மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறார்கள். தாங்கள் விருப்பம்போல் செய்வதை மக்கள் கேள்வி எழுப்ப மாட்டார்கள் என்று நம்புகிறார்கள்.
ஆனால், இளைஞர்கள் கேள்வி எழுப்பி, போராட்டடத்தில் ஈடுபட்டு, அரசிடமிருந்து பதிலைக் கோரினால், அவர்களை தாக்கி, சிறையில் அடைத்து போராட்டத்தை தடுப்பதன் மூலம் அவர்களின் குரல்களை ஒடுக்க முயல்கின்றனர். இது ஜனநாயகம் அல்ல. ஜனநாயகத்தில், அரசாங்கம் மக்களுக்குப் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்ந்தால், அரசாங்கம் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். வேறு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலும், அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையிலும், அவர்கள் மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியது அவசியம். இதுதான் ஜனநாயகம்; நமது அரசியலமைப்பும் இதையேதான் கூறுகிறது.
ஜனநாயக நாட்டில் மக்களுக்குப் போராடுவதற்கான உரிமை உண்டு. இந்த உரிமையை அவர்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ளது. மக்கள் தங்கள் அரசியலமைப்பு உரிமையைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். வன்முறை நிகழும் பட்சத்தில், நிச்சயமாக காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம். ஏனெனில், அவர்கள் சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டியது அவசியம். ஆனால், அமைதியாக நடைபெறும் எந்த போராட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட வேண்டும்” என்றார்.