ஜார்க்கண்ட்: 8 வயது சிறுமி நரபலி; 3 பேர் கைது
ஜார்க்கண்டில் மூடநம்பிக்கையால் 8 வயது சிறுமி நரபலி கொடுக்கப்பட்டது பற்றி...
ஜார்க்கண்டில் 8 வயது சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர்.
ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டத்தில், அந்தச் சிறுமி நவம்பர் 8-ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்தார். அவரைத் தேடியும் கண்டறிய முடியாததால், அவரது தாயார் நவம்பர் 11-ஆம் தேதி பிரதாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நவம்பர் 13-ஆம் தேதி, அவரது வீட்டிலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் இருந்த நெல் வயலிலிருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அனிமேஷ் நைதானி தலைமையிலான காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Advertisement
Advertisement
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் இவர்களுக்கு ஏற்கெனவே முன்விரோதம் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆன்மிக சக்திகளைப் பெறுவதற்காக, பில்லி சூனியம் செய்யும் சிறுமியின் அத்தை, அவரது கணவரின் மூத்த சகோதரர் மற்றும் மருமகன் ஆகியோர் இணைந்து இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். மூடநம்பிக்கை காரணமாக சிறுமி கொல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
குற்றவாளிகளின் வீட்டிலிருந்து ரத்தக்கறையுடன் கூடிய அரிவாள், மண்வெட்டி, உடைந்த சிவப்பு வளையல்கள் மற்றும் வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட பூஜைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொலையை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது போலத் திசை திருப்புவதற்காகக் குற்றவாளிகள் சிறுமியின் மீது மூங்கில் குச்சியால் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், இவர்களுக்குப் பயிற்சி அளித்த பிகாரைச் சேர்ந்த மதகுரு ஒருவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்தச் சடங்கின் ஒரு பகுதியாகச் சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகவும், பின்னர் அவரது உடல் நெல் வயலில் வீசப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.