உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி!
உத்தர பிரதேச மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி பற்றி...
மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்குப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி சனிக்கிழமை ராஜிநாமா செய்தார்.
இதுதொடர்பாக மாநிலங்களவைச் செயலர் பி.சி. மோடி வெளியிட்டுள்ள அறிவிக்கையில், "உத்தரப் பிரதேச மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலங்களவை உறுப்பினரான ஹர்தீப் சிங் பூரி, தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவரது ராஜிநாமாவை நவம்பர் 14 முதல் அமலுக்கு வரும் வகையில் மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஏற்றுக்கொண்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
உத்தரப் பிரதேச மாநிலங்களவை உறுப்பினராக அவரது பதவிக்காலம் நவம்பர் 25-ஆம் தேதியுடன் முடிவடையவிருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சராகப் பதவி வகித்து வந்த எல். முருகன், தனது அமைச்சர் பதவி மற்றும் மாநிலங்களவை எம்.பி. பதவியை கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி ராஜிநாமா செய்தார். மத்தியப் பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது பதவிக்காலம் 2030, ஏப்ரல் 2-ஆம் தேதி வரை இருந்தது.
எல். முருகனின் ராஜிநாமாவால் காலியான அந்த இடத்துக்கு நவம்பர் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த இடத்துக்கு பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வேட்புமனு தாக்கல் செய்தார். வேறு யாரும் போட்டியிடாததால், அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தேர்தல் நடத்தும் அதிகாரி உமேஷ் சர்மா கடந்த நவம்பர் 5-ஆம் தேதி அறிவித்தார். இதையடுத்தே, ஹர்தீப் சிங் புரி தனது உத்தர பிரதேச எம்.பி. பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.