மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரிக்கு மீண்டும் மாநிலங்களவை எம்.பி. சீட் இல்லை!
உ.பி. மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பற்றி...
உத்தரப் பிரதேச மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தலைமை திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
இதில், பாஜக சார்பில் தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாகவுள்ள மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்பட 8 பேரின் பெயரும் இடம்பெறவில்லை. முற்றிலும் புதிய வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் காலியாகவுள்ள 10 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வருகின்ற அக். 16ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடிப்படையில், பாஜகவுக்கு 8 இடங்களும், சமாஜவாதி கட்சிக்கு 2 இடங்களும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களை அக்கட்சி தலைமை இன்று வெளியிட்டுள்ளது. இவர்கள் 8 பேரும் புதுமுகம் ஆவர்.
ஏற்கெனவே, உ.பி.யிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக மாநிலங்களவை உறுப்பினர்களாகவுள்ள ஹர்தீப் சிங் புரி, பி.எல். வர்மா, அருண் சிங், சீமா திவேதி, நீரஜ் சேகர், பிரிஜ் லால் மற்றும் கீதா சக்யா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
முன்னதாக, உ.பி. பாஜக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த தினேஷ் சர்மா, தற்போது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநராகப் பொறுப்பு வகிக்கிறார்.
தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், தரம் பால் சிங், ராதாகாந்த் ஓஜா, பிரகாஷ் பால், வித்யாசாகர் சோன்கர், கோபி கிருஷ்ணா பாண்டே, பிரியங்கா சிங் ரெளத், ராம் பிரதாப் சிங் செளகான் மற்றும் ஸ்ருதி கங்வார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் மூவர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இருவர் பட்டியலின சமூகத்தினர், மூவர் பொது வகுப்பினர் ஆவர். 8 பேரில் இருவர் பெண் வேட்பாளர்கள் ஆவர்.
No Rajya Sabha seat for Union Minister Hardeep Singh Puri again - UP BJP Candidates list
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.