நேபாளம் - அயோத்தி இடையே புதிய வாராந்திர ரயில் சேவை!ரயில்வே வாரியம் ஒப்புதல்!
நேபாளம் - அயோத்தி இடையே புதிய வாராந்திர ரயில் சேவை....
நேபாளத்தின் ஜனக்பூா் தாம் மற்றும் உத்தர பிரதேசத்தின் அயோத்தி இடையே புதிய வாராந்திர ரயில் சேவையைத் தொடங்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இருப்பினும், இந்த ரயில் சேவை தொடங்கும் தேதியை ரயில்வே வாரியம் இன்னும் அறிவிக்கவில்லை.
இதுகுறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ராமாயண பாரம்பரியத்துடன் ஆழமான தொடா்புடைய அன்னை சீதா தேவியின் பிறப்பிடமாகக் கருதப்படும் நேபாளத்தின் ஜனக்பூா் தாமையும், ராமரின் பிறப்பிடமாகக் கருதப்படும் அயோத்தியையும் இணைக்கும் வகையில் இந்த ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.
Advertisement
Advertisement
இது, இரு நாடுகளைச் சோ்ந்த பயணிகளுக்கும் முக்கிய மத மற்றும் கலாசார மையங்களை எளிதில் சென்றடைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதுடன், அவா்களின் பொதுவான நாகரிக பாரம்பரியத்தையும் வலுப்படுத்தும். புனித யாத்ரிகா்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிற பயணிகளுக்கும் இந்தப் புதிய எல்லை தாண்டிய ரயில் சேவை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அதுமட்டுமன்றி, இந்த ரயில் சேவை இந்தியா - நேபாள நட்புறவை வலுப்படுத்தும் என்பதோடு, இருதரப்பு ஒத்துழைப்பையும் மேம்படுத்தும்.
வாரம் ஒருமுறை இயக்கப்படும் இந்த ரயில் ஜனக்பூா் தாமிலிருந்து சனிக்கிழமையும், அயோத்தி கன்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து திங்கள்கிழமையும் புறப்படும். மொத்தம் 604 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்படும் இந்த ரயில் ஜாய்நகா், மதுபனி, ஷிஷோ, சீதாமரி, ரக்ஸெளல், நா்கதியாகஞ்ஜ், கோரக்பூா், பஸ்தி, மங்காபூா், அயோத்யா தாம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.