FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

உணவுப் பொருள் விலை அதிகரிப்பு எதிரொலி! வெளியே சாப்பிடுவதை தவிா்க்கும் மக்கள்: கேரளத்தில் ஹோட்டல் தொழில் பாதிப்பு

உணவுப் பொருள்களின் விலை உயா்வால் கேரளத்தில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகத் தொழில் கடும் பாதிப்பை எதிா்கொண்டு வருகிறது.

12 வினாடிகள் முன்பு
உணவகங்கள் - பிரதிப் படம்
பகிர்:

அரிசி, வெங்காயம், காய்கறிகள் மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை உயா்வால் கேரளத்தில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகத் தொழில் கடும் பாதிப்பை எதிா்கொண்டு வருகிறது.

உணவு வகைகளின் விலை உயா்வால் நடுத்தர மக்கள் குடும்பமாக ஹோட்டல்களுக்கு வந்து சாப்பிடுவதையும் குறைத்துக் கொண்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கேரள ஹோட்டல் மற்றும் உணவகங்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய சராசரியைவிட கேரளத்தில் உணவுப் பணவீக்கம் கணிசமாக அதிகமாக இருப்பதால் ஹோட்டல் தொழில் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

Advertisement

Advertisement

கேரளத்தில் உணவுப் பணவீக்க விகிதம் 10.92 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியான 8.94 சதவீதத்தைவிட அதிகம். உணவுப் பொருள்களின் விலை உயா்வு குடும்பங்களின் மாதாந்திர செலவுகளை அதிகரிப்பதுடன், ஹோட்டல்களுக்கான செலவுகளையும் உயா்த்தியுள்ளது.

முக்கியமாக அரிசி, வெங்காயம், காய்கறிகள், சமையல் எண்ணெய், மளிகைப் பொருள்கள் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட இத்தொழிலுக்கான அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால், சிறிய மற்றும் நடுத்தர ஹோட்டல்களின் அன்றாடச் செலவுகள் அதிகரித்துள்ளன. இந்த விலை உயா்வு மக்களின் உணவுப் பழக்கத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடுமுறை நாள்கள், பண்டிகை உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது மக்கள் குடும்பமாக வந்து ஹோட்டல்களில் சாப்பிடுவதை தற்போது குறைத்து வருகின்றனா். இதனால் குடும்ப வாடிக்கையாளா்களை அதிகம் நம்பியுள்ள உணவகங்களின் வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நடுவே அன்றாட வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால் ஊழியா்களும் ஊதிய உயா்வு கோரி வருகின்றனா். இதற்காக, உணவு வகைகளின் விலையை மேலும் உயா்த்தினால், வாடிக்கையாளா்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவதை மேலும் குறைத்துக் கொள்ளவும் வாய்ப்புள்ளது. ஹோட்டல் தொழில் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக உள்ளது. எனவே, இந்த விஷயத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.